காவல் துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு... முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்...
காவல் துறையில், காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு காவல்துறை ஆளிநர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்
24 மணி நேரமும் பணி செய்து வரும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதோடு அடுத்தக்கட்ட நகர்வு எதுவுமில்லாமல் இருந்தது.
தொடர் பணியால் காவல் துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவது, உடல் நிலை பாதித்து இறப்பு, தற்கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. பல தரப்பிலும் விடுப்பு அளிக்கும்படி கோரிக்கைகள் தொடர்ந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார்.
அதன்படி அதற்குறிய அரசாணை 03.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தமிழக காவல்துறையில் காவலர்கள் எவ்வித ஓய்வும் இன்றி தொடர்ந்து பணிபுரிவதால் மனதளவில் சோர்வடைகிறார்கள்.
இதனால் அவர்கள் உடல் நலனும் பாதிப்படைந்து அவர்கள் பணித்திறன் பாதிக்கும் ஆபத்து உள்ளது. 1977ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய காவல் ஆணையம் மற்றும் அதன்பிறகு வந்த காவல் ஆணையங்களில் காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வது குறித்து உறுதியாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு காவல் நிலை ஆணை 243 (1)ன் படி, வார விடுமுறை வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் வாரத்தில் ஒரு நாளாவது காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு காவல்துறையின் தலைமை இயக்குநர் அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. அதன்படி தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் 7 நாட்களில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பணிபுரிய நேர்ந்தால் அதற்குறிய ஒரு நாளைக்குறிய ஊதியம் தனியாக வழங்கப்படும். வார விடுமுறை அந்தந்த காவல் நிலைய பணிச் சூழலைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வாரம் விடுப்பு எடுக்கும் காவலரின் பெயர் விவரங்கள் காவல் நிலைய நோட்டீஸ் போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றுக் காவலரை பணியில் அமர்த்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
"இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை வார ஓய்வு குறித்து தமிழ்நாடு முதல்வர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையில் ஐந்து நாட்கள் பணியும், ஆறாவது நாளில் பணி மேற்கொண்டால் அதற்கு உண்டான மிகைப் பணி ஊதியமும் (Extra Time Remuneration), வாரத்தில் ஒரு நாள் ஓய்வும் வழங்கப்படும்.
காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த வார ஓய்வு குறித்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக காவல்துறையினர் தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் முதல்நிலை காவலர்கள் முதல் தலைக்காவலர்கள் வரை சுமார் 832 காவலர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தில் பயனடைந்த காவலர்கள் தெரிவித்ததாவது…
என்னுடைய பெயர் திலகராஜ். நான் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறேன். காவல் துறையினருக்கு சில நேரங்களில் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு விடுபோ அல்லது அனுமதி விடுப்பு கூறும்போது பணிச்சூழல் காரணமாக கிடைப்பதில்லை. இதனால் குடும்பப் பிரச்சினையும் மன உளைச்சலும் ஏற்படும் சூழல் இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழ்நாடு காவல் துறையினருக்கு விடுப்பு கிடைக்காத சிரமத்தை மனதில் கொண்டு வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என வாக்குறுதி அறிவித்து அவ்வாறு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். காவல்துறையினருக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை ஒரு நாள் மிகை நேர வேலை என்ற நிலையை மாற்றி ஐந்து நாட்கள் வேலை ஒரு நாள் மிகை நேர ஊதியத்துடன் வேலை ஒருநாள் கட்டாய ஓய்வு என மாற்றி அமைத்து காவல் துறையினரின் மன அழுத்தத்தையும் பணி சுமை குறைத்து சிறப்பாக பணி செய்ய வழிவகுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையினர் சார்பாகவும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனது பெயர் மீனாட்சி. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு முதற்கண் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறேன். தாங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் காவல்துறையினரின் இடைவிடாது பணி சுமைகளை கருத்தில் கொண்டும் காவலர்கள் படும் துன்பங்களை மனதில் கொண்டும் வாரத்தில் ஒருநாள் ஊதியத்துடன் ஓய்வு என்பது காவலர்களுக்கு கட்டாயம் வேண்டும் என உணர்ந்து வாராந்திர ஓய்வு அளித்துள்ளீர்கள். இது காவலர்களுக்கு உதவியாக உள்ளது. அதுவும் எங்களை போன்ற பெண் காவலர்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடவும் எங்களின் சொந்த வேலைகளை செய்யவும் குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்கவும் வெளியில் அழைத்துச் செல்லவும் முழுமையாக ஒரு நாள் முழுவதும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் உதவியாக இருந்தது.
மேலும் ஊதியத்துடன் வாராந்திர ஓய்வு அளித்துள்ளது உங்களது மனப்பான்மையை காட்டுகிறது. மேலும் காவல்துறையினருக்கு இதுபோன்ற சலுகைகளால் நாங்கள் சந்தோஷமாக பணியினை செய்ய இயலும் என கூறி மீண்டும் உங்களுக்கு பெண் காவலர்கள் சார்பாக பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொகுப்பு :
ப.கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.
Post Comment
No comments
Thank you for your comments