Success Story : பவர்டில்லர் பெற்று பயனடைந்த விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் பவர்டில்லர் பெற்று பயனடைந்த விவசாயிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாய பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவைகள் முறையே, வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம், சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல், மானியத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் கொடுக்கும் திட்டம், வேளாண் விளைப்பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல், வேளாண் விளைப்பொருட்கள் மதிப்புக் கூட்டு மையம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிக்கும் மையம், தமிழ்நடு நீர்வள நவீன மயமாக்குதல் திட்டம் மூலம் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வேளாண்மைப் பொறியியல் துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைத்து நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி, குறைவான வாடகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இ-வாடகை வாயிலாக வேளாண் இயந்திரங்கள் கொண்டு உழவு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு 2023-24 ஆம் ஆண்டு வேளாண்மை-உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நில உடமையினைக் கருத்தில் கொண்டு, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமான“ கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டக்” கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர் டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில் 2504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் 5000 பவர் டில்லர்கள் வழங்கப்படும்” என்ற அறிவிக்கப்பட்டு, மேற்படி திட்டமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக 04.09.2023 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.1.73 கோடி மானியத்தில் 198 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசை களையெடுப்பான் கருவிகள் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
உத்திரமேரூர் வட்டம், ஒழுகரை கிராமத்தை சார்ந்த திரு.க.ஏழுமலை, அவர்கள் நலத்திட்ட உதவி பெற்றுக்கொண்டு, அவர் தெரிவித்ததாவது:
நான் உத்திரமேரூர் வட்டம், ஒழுகரை கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்திற்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை, குறித்த நேரத்தில் உழுவை பணிகளை மேற்கொள்ள முடியாமல் போகுதல், அதிக வாடகை கொடுத்தல் போன்ற காரணத்தினால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தேன்.
நல்வாய்ப்பாக வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம் பற்றி துறை அதிகாரிகள் வாயிலாக தெரிந்து கொண்டு உடனே உழவன் செயலியில் முன்பதிவு செய்தேன். வெகு குறைந்த நாட்களிலேயே முன்னுரிமை அடிப்படையில் எனக்கு விருப்பான பவர் டில்லர் மற்றும் அதன் முகவரை தேர்ந்தெடுக்க குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
அதன்படி பவர்டில்லர் மற்றும் முகவரை தேர்ந்தெடுத்தேன். மானியம் கழித்து மீதமுள்ள தொகைக்கு காசோலை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. தற்சமயம் எனது நிலத்தினை நானே உழுவை பணிகளை மானியத்தில் பெற்ற பவர்டில்லர் மூலம் செய்து வருகிறேன். தரிசாக இருந்த 3 ஏக்கர் நிலம் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளேன். விவசாய பெருமக்களுக்கு உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு:
திரு.க.இராமச்சந்திர பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments