அகத்தீஸ்வரர் கோயிலுக்கு செல்ல வழியின்றி தவிக்கும் பக்தர்கள் – கிளார் கிராமத்தில் சாலையின்றி சிரமம்!
காஞ்சிபுரம் :
சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில், கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல விவசாய நிலத்தின் வழியே அமைந்திருந்த மண்பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த மண்பாதை தற்போது நில உரிமையாளர் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பயிர் நடவு செய்யப்பட்டு உள்ளது.
அதுமட்டுமில்லாமல், பக்தர்களுக்காக பதிக்கப்பட்ட தெரு விளக்குகளும் அகற்றப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள், குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகள் சிரமத்துடன் கோயிலுக்கு சென்று வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதுபற்றி விசுவ ஹிந்து பரிஷத் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சிவானந்தம் கூறுகையில்,
“அகத்தீஸ்வரர் ஆலயம் ஒரு பாரம்பரிய சிவஸ்தலம். கோயிலுக்கு செல்லும் பாதை இன்று பகிரங்கமாக ஆக்கிரமிக்கபட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த அவதி அனுபவிக்கின்றனர். மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கிராம சபை கூட்டத்தில் இந்தப் பாதைக்கு சிமென்ட் சாலை அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்றார்.
இதனால், கிளார் கிராம மக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் அனைவரும் ஒன்றிணைந்து தகவலறியும் உரிமை சட்டம், சமூக அமைப்புகள், ஊடகங்கள் மூலம் சரியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
No comments
Thank you for your comments