குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 : மிதுன ராசி பொதுப்பலன்கள்
நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர். நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும், புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.
குருவருள் இருந்தால் திருவருள் கூடிவரும் என்பது ஆன்மிக நியதி ; குரு பார்வை இருந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்பது ஜோதிட விதி.
குரு பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் குருபகவான் சுப பலம் பெற்று, நல்ல இடத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் மற்றவர்கள் போற்றும்படியாக வாழ்வர். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, பழக்க வழக்க குணங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் தரும்.
குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார்.
💐 குரு பார்வை செய்யும் இடங்கள்
☺மிதுன ராசி - குருவின் 5ம் பார்வை
☺சிம்ம ராசி - குருவின் 7ம் பார்வை
☺துலாம் ராசி- குருவின் 9ம் பார்வை
குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும், தோஷம் விலகி விடும். நீசம் பெற்ற கிரகங்களும் குருபார்வை செய்தால் நீச பங்கம் யோகமாகிவிடும்.
கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2-5-7-11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலன்களையே வழங்குவார்.
குரு பெயர்ச்சி காலம் - நேரம் :
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு குரு அதிர்சார காலம் :
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 27ம் தேதி (13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்திரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு (மாலை மணி 6.22க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.
பின்பு குரு அதிர்சார காலம் :
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு அதிசாரம் என்றால் என்ன?
சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் அவ்வப்போது அதிசார, வக்ர நிலை காரணமாக முன்னும், பின்னும் செல்லும். ஜோதிட விதிப்படி குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இதில் சில காலம் மட்டும் அதிசார நிலைக்கு சென்று வருவார். குரு பெயர்ச்சிக்கும், குரு அதிசார பெயர்ச்சிக்கும் நிறைய மாற்றங்களுடன் கூடிய பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும். சில ராசிகளுக்கு யோக பலன்கள் குரு பெயர்ச்சியின் போது கிடைக்கும். அதுவே அதிசார பெயர்ச்சியின் போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறலாம். சிலருக்கு மோசமான பலன்கள் யோக பலன்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
மிதுன ராசி குரு பெயர்ச்சி பொது பலன்கள்மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதை துல்லியமாக எடைபோட்டு நீதி வழங்குவார்கள். இவர்கள் யாருடைய துணையும்மின்றி தனியாக வாழ விரும்புவார்கள். யாரிடமும் உதவி கேட்டு செல்ல மாட்டார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதை ஆர்வமாக செய்வார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் உயரமான உடலமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒல்லியான தேகம் கொண்டவர்கள். மிதுன ராசியில் பிறந்தவர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்வார்கள். சோம்பேறித்தனமாக இருக்க விரும்ப மாட்டார்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்கள் குணத்தை மாற்றி கொள்வார்கள். இவர்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே இவர்களை பற்றி புரிந்து கொள்ள முடியும். பழகுவதற்கு சற்று கடினமானவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபக சக்தி இருக்கும். எதையும் சொன்ன அல்லது கேட்ட மாத்திரத்தில் அதை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
மிதுன ராசிக்கு அஷ்டம சனியோடு, குருவும் நீச்சமாக இருந்ததால், இதுவரை சொல்லில் அடங்காத துன்பத்தை அனுபவித்து வந்தனர். உங்களின் நற்பெயர் கெடுதல், அவமானம், ஆன்மிகவாதிகளுக்குச் சோதனைகள், உடல் ஆரோக்கியம் பாதித்தல், பொருளாதார பாதிப்பு என பல பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள்.
கால புருஷ தத்துவத்தின் படி குரு பகவான் 11ம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதுவரை குரு சனி பகவானின் வீடான மகரத்தில் முழு நீச்சமாக இருந்தார். தற்போது சமம் என்ற இடத்திற்கு செல்ல உள்ளார். குரு பெயர்ச்சியால் அற்புத பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசி மிதுனம். ஏற்கனவே அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள். இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறையப்போகிறது என்று சொன்னால் மிகையல்ல.
பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, 10க்கு உடைய ராசி அதிபதி உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களின் தேக்கங்கள் நீங்கும்.
இந்நிலையில் குரு உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அமர்வதாலும், உங்கள் ராசியை குரு 5ம் பார்வையாக பார்ப்பதால் மிகப்பெரிய வலிமையும், அதிர்ஷ்ட பலன்களும் உங்களுக்கு ஏற்படும்.
கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தல், ஆன்மிக நாட்டம் கொள்ளுதல், மகான்களின் ஆசி பெறுதல் என நன்மை உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் விரைவாக நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். குழந்தை வரத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பெரியவர்களின் அருள், ஆசி கிடைக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். சொத்து வாங்குதல், விற்றல் வகையில் உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான முன்னேற்றங்களை அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளுக்கு வெற்றி கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும், உங்களுடன் இருப்பவர்களால் உங்களின் பெயர் கெடக்கூடிய வாய்ப்பு உள்ளது. வேலை நிமித்தமாக சில அவமானங்கள் ஏற்படலாம்.
வெளிநாடு தொடர்பான தொழில், வியாபாரம், வேலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அவர்களின் முயற்சியும், கனவும் பலிக்கும். வெற்றிகள் குவியும். புதிய வாகனம் வாங்குவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவதோடு குலதெய்வப் பிராத்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள்.
குருபகவானின் சஞ்சார பலன்கள்:
13.11.2021 முதல் 30.12.2021 வரை
இந்தக் காலகட்டங்களில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். அவமானங்களும் சின்னச் சின்ன விபத்துகளும் ஏற்படலாம். எனவே செயல்களில் சிறு நிதானம் தேவை. புதிய வீடுமனை வாங்கும்போது ரொம்பவே எச்சரிக்கை அவசியம். சட்டப்படியே எதையும் செய்யுங்கள். சகோதர வகையில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. யாரோடும் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
31.12.2021 முதல் 02.03.2022 வரை
இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள், தேவையற்ற பதற்றம், டென்ஷன் வந்து செல்லும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும். வீட்டிலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களிடம் கடுமை காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை
இந்தக் காலகட்டத்தில் குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் வாழ்க்கைத் துணையோடு விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். வீண் கவலைகள் மனதில் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களை வீட்டில் பேசிகொண்டிருக்காதீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் ஏற்படலாம். எதற்கெடுத்தாலும் உறவுகளோடு சண்டைக்கு நிற்காதீர்கள்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகப்படுத்துவதாக அமையும். வெற்றிவாய்ப்புகள் தேடிவரும்.
🔥 பரிகாரம்:
குரு, புதன் வழிபாடு செய்வதும், இஷ்ட தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டு வருவதால், உங்கள் வெற்றிக்கு எந்த தடையும் ஏற்படாது. விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள் குறிப்பாக மாங்கல்யம் வாங்கிக் கொடுத்தால் உங்கள் வாழ்வில் செல்வ வளம் கிடைக்கும்.
💐 நட்சத்திர பலன்கள் 💐
💐மிருகசீரிடம் 3, 4ம் பாதம் :
அஷ்டமத்துச் சனியின் கஷ்டத்தைத் தாங்கி வரும் உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சற்று நிம்மதியைத் தரும். 8ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இது வரை சஞ்சரித்து வந்த குரு இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு 9ம் இடமாகிய பாக்ய ஸ்தானத்திற்கு இடம் பெயர உள்ளார். மனதினில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். தர்ம, நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை ஒதுக்கிவிட்டு சரியான பாதையில் பயணிப்பீர்கள். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் புதனை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் வேகத்துடன் விவேகத்தையும் கையாண்டு வெற்றி காண்பீர்கள். நட்பு வட்டத்தின் மூலமாகவும் நீங்கள் தனிப்பட்ட முறையில் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரின் மூலமாகவும் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். கடந்த ஒரு வருட காலமாக தடைபட்டு வந்த முக்கியமான பணி ஒன்றினை அடுத்து வரவுள்ள ஐந்து மாத காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள்.
நிதி : அநாவசிய செலவுகள் குறையும். அதே நேரத்தில் தான தர்மத்திற்காக செய்யும் செலவுகள் கூடும். எதிர்கால நலன் கருதி பிள்ளைகளின் பெயரில் புதிய சேமிப்பில் இறங்குவதற்கான வாய்ப்பு கூடி வரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்புண்டு. குடியிருக்கும் வீட்டினில் மாற்றம் செய்ய முற்படுவோருக்கும், புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கும் நேரம் கூடி வரும். கடன் தொல்லை குறைந்து நிதி நிலை ஏறுமுகமாகவே அமையும்.
குடும்பம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கி அவர்களோடு இணைந்து செயல்படுவீர்கள். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்கள் மற்றவர்களின் பாராட்டினைப் பெறும். வாழ்க்கைத்துணையின் மனநிலையில் கவனம் தேவை. சம்பாதித்த சொத்தினை பிள்ளைகளின் பெயருக்கு உயில் எழுத காத்திருப்போருக்கு நேரம் கூடி வருகிறது. பாகப்பிரிவினைகள் பிரச்னை ஏதுமின்றி முடிவிற்கு வரும்.
கல்வி : ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்கள் தனித்திறமையை கூட்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடத்தும் பயிற்சித் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புள்ளிவிபரத்துடன் விடையளிக்கும் திறனை உயர்த்திக் கொள்வீர்கள். கணிதம், மொழிப்பாடங்களில் சிறந்து விளங்கும் நீங்கள் அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்கள் : பாராட்டி பேசுபவர்களை நல்லவர்கள் என நம்பிவிடுவது உங்களின் மிகப் பெரிய பலவீனம். கடந்த சில நாட்களாக தடைபட்டு வந்த சேமிப்பு மீண்டும் உயரத் துவங்கும். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்வுகளைக் காண்பீர்கள். குடும்பப் பணிகளில் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருக்கும். கணவரோடு வீண் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் ஆதரவோடு நினைத்ததை சாதித்து வருவீர்கள்.
உடல்நிலை : ரோக ஸ்தானத்தில் கேதுவின் அமர்வு பல்வேறு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் நிலையில் குருவின் பார்வை உங்கள் ஆரோக்யத்தைக் கட்டிக் காக்கும். தலைவலி. நரம்பு தளர்ச்சி, முதுகுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி ஆகிய தொந்தரவுகளால் அவ்வப்போது அவதிப்பட நேரிடலாம். குருவின் பார்வை விழுவதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நோய் எதிர்ப்புத் திறன் கூடுவதால் நோய்த்தொற்று சார்ந்த பயம் ஏதும் கிடையாது.
தொழில் : ஜீவன ஸ்தான அதிபதி குரு ஒன்பதில் அமர்வதால் தொழில்முறையில் அதிக அலைச்சலின் மூலம் முன்னேற்றம் காண உள்ளீர்கள். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு தொழில் மாற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். சிலர் தங்களின் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் ஈடுபட நேரிடும். காவல்துறை, சட்டத்துறை, கல்வித்துறை, ரெவின்யூ துறை சார்ந்த பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி தங்கள் திறமையை நிரூபிப்பதோடு பாராட்டும் பெறுவார்கள். அந்நிய தேசம் செல்ல காத்திருப்போருக்கு கால நேரம் கூடி வரும்.
பரிகாரம் : வியாழன் தோறும் கருடாழ்வாரை வழிபட்டு வாருங்கள்.
💐 திருவாதிரை :
அஷ்டமத்துச் சனியால் சங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நினைத்ததை சாதிக்கும் திறனை அளிக்கிறது. நட்சத்திர அதிபதி ராகு 12ல் நீசம் பெற்றாலும் ராசிநாதன் புதனின் புத்திகூர்மையைக் கொண்டிருக்கும் நீங்கள் நேரத்திற்குத் தகுந்தாற்போல் உங்களை மாற்றிக்கொண்டு செயல்படுவீர்கள். கும்ப குருவின் சஞ்சார காலத்தில் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். கடன்பிரச்னைகள் குறையும். கடந்த சில வருடங்களாகக் கண்டு வரும் தடைகள் விலகும். தனிப்பட்ட முறையில் கவுரவம் உயர்வதோடு சுற்றியுள்ளோரையும் உங்களைச் சார்ந்திருக்கச் செய்வீர்கள். குருபகவானின் சாதகமான சஞ்சாரத்தினால் உங்களின் நல்லெண்ணங்களும், நற்சிந்தனைகளும் வெளியுலகத்திற்குத் தெரிய வரும். உண்மையாக உழைத்து வந்ததற்கான ஊதியமாக பாராட்டுகள், விருதுகள் வந்து சேரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள்.
நிதி : கடன் பிரச்னைகளில் இருந்து ஓரளவிற்கு விடுபடுவீர்கள். செலவுகள் கூடினாலும் அவற்றை சமாளிக்கின்ற வகையில் வரவு நிலையும் தொடரும். பிள்ளைகளின் பெயரில் புதிய சேமிப்பினைத் துவங்குவீர்கள். தங்கம், வெள்ளிப் பொருட்கள் சேரும். வங்கியில் அடகு வைத்திருந்த நகைகள் வீட்டிற்குள் வரும் நேரமிது. அடுத்தவர்களுக்கு உதவுவதற்காக கடனாக கொடுத்த தொகை திரும்ப வராமல் போகலாம்.
குடும்பம் : குடும்பத்தினர் உங்கள் எண்ணத்தை புரிந்து செயல்படுவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில் திருப்பு முனை உண்டாகும். அவர்களின் முன்னேற்றத்தில் உங்களின் பங்கு பிரதானமாக இருக்கும். உடன்பிறந்தோரின் குடும்பத்தில் உண்டாகும் சலசலப்புகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் வாழ்க்கைத்துணை முக்கியப் பங்காற்றுவார். அவரது உடல்நிலையிலும் மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கல்வி : குருவின் பார்வை விழுவதால் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கற்பனைத்திறன் வெகுவாகக் கைகொடுக்கும். ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வம் இல்லாமல் போகும். ஆனாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்தி படித்தாலே நல்ல மதிப்பெண்களைப் பெற குரு துணையிருப்பார்.
பெண்கள் : இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களைத் தருகிறது. ஆரோக்கியம் மேம்படும். மெனோபாஸ் காலத்தில் உள்ள பெண்கள் மனத்தெளிவினைப் பெறுவார்கள். கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் குருவின் அருளால் தீரும். அடுத்து வரவுள்ள ஐந்து மாத காலமும் சந்தோஷமாகக் கழியும். கணவர் உங்கள் திட்டங்களுக்கு துணையிருப்பார். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். பிள்ளைகளின் வாழ்வினில் நன்மை நடக்கக் காண்பீர்கள்.
உடல்நிலை: குருவின் பார்வையால் ஆரோக்யம் மேம்படும். ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும். ஆறாம் இடத்து கேது அவ்வப்போது உடல் அசதியைத் தோற்றுவிப்பார். உடல் அசதியை வெற்றி கொள்ள மிதமான உடற்பயிற்சி அவசியம். தோல் வியாதியால் அவதிப்பட்டு வருபவர்கள் அதிலிருந்து மீள்வார்கள்.
தொழில் : பொறமைக்காரர்களால் சிரமத்தை சந்தித்து வரும் உங்களுக்கு குருவின் துணை பக்கபலமாய் அமையும். அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை செய்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் நேர்மையான அணுகுமுறையால் நற்பெயரும் நல்ல லாபமும் காண்பர். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். அந்நிய தேசத்தில் பணி கிடைக்காமல் அவதிப்படுவோர் தற்காலிகமாக ஏதேனும் ஒரு பணியில் சேர வாய்ப்பு வந்து சேரும். பலசரக்கு, ஸ்டேஷனரீஸ், நாட்டுமருந்து வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். சிறு குறு வியாபாரிகள் நல்ல லாபம் காண்பர். மொத்தத்தில் கும்ப குருவின் சஞ்சாரம் உங்களுக்கு உயர்வினைத் தரும்.
பரிகாரம் : செவ்வாய் தோறும் வாராஹி அம்மனை வழிபட்டு வாருங்கள்.
💐புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ஆகிய குரு பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதில் வந்து அமர்வதால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புத்திகூர்மையைத் தரும் புதனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் நீங்கள் கும்பத்தில் குரு சஞ்சரிக்க உள்ள இந்த ஐந்து மாத காலத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. கால அளவு குறைவாக உள்ளதால் ஒரு நாளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். சோம்பல் தன்மையை விடுத்து சுறுசுறுப்புடன் செயல்படுபவர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் என்பதும் கைகொடுக்கும். அஷ்டமத்துச் சனி லேசான தடுமாற்றத்தைத் தந்தாலும் குருவின் பார்வை உங்களை பாதுகாக்கும். முன்பின் தெரியாத விவகாரங்களில் அணு அளவும் தலையிடாதீர்கள். அன்பான அணுகுமுறையே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
நிதி : குருவின் அனுகூலமான நிலையால் சிக்கன முயற்சிகள் பலன் தருவதோடு சேமிப்பும் உயர்வடையும். குறிப்பாக பிள்ளைகளின் எதிர்காலம் கருதி திட்டமிடும் சேமிப்பு பணிகள் வெற்றி பெறும். வீட்டினில் தங்க நகைகள் சேரும். ம்யூச்சுவல் பண்ட் கைகொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகள் வசூலாகும். நெருங்கிய நண்பர் ஒருவர் நீங்கள் செய்த உதவியை மனதில் கொண்ட கைமாறு செய்வார். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆன்லைன் வர்த்தகம் கைகொடுக்கும். கிரெடிட் கார்டுகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
குடும்பம் : குடும்பத்தினர் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போவார்கள். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் அதிக அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணங்கள் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கும். அவர்களோடு அதிக நேரத்தை செலவழிப்பதன் மூலம் அவர்களது மனநிலையை புரிந்துகொண்டு நல்வழிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக துணையிருப்பார். உறவினர்களிடமிருந்து நீங்கள் விலகியிருக்க விரும்பினாலும் அவர்கள் உங்களை விடமாட்டார்கள். எவர் மனமும் நோகக்கூடாது என்பதில் அதிக கவனம் கொள்வீர்கள்.
கல்வி : குருவின் அருளால் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். ஆசிரியர், மாணவர் இடையே உறவு மேம்படும். பிராக்டிகல் வகுப்புகளில் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குரு பகவானின் துணையினால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். அதே நேரத்தில் எழுதும் திறன் குறைவாக இருப்பதால் தேர்வினில் விடையளிக்க நேரம் போதவில்லை என்ற குறை உண்டாகலாம். பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஸியோதெரப்பி, பயோடெக்னாலஜி பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.
பெண்கள் : தேவையில்லாத வீண் பேச்சுக்கள் உங்களுக்கு அவப்பெயரைத் தரக்கூடும். நீங்கள் நல்லது என்று நினைத்து பேசும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அதனால் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்திற்கு ஆளாகும் வாய்ப்புண்டு. தம்பதியருக்கிடையே அவ்வப்போது வீண் வாக்குவாதம் காரணமாக கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பிரச்னையின் போது அமைதியாக இருப்பது மட்டுமே வெற்றியைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
உடல்நிலை: நீண்ட நாள் நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவுகளை உடையவர்கள் உரிய சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்வது நல்லது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவது அவசியம். பலவீனம் காரணமாக உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைகடலை சிறிதளவு சாப்பிட்டு வருவது நல்லது.
தொழில் : ஜீவன ஸ்தான அதிபதி ஆகிய குருவின் பார்வையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயரை அடைவீர்கள். அரசாங்க பணியாளர்கள் விரும்பிய பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் அதிக வேகத்துடன் செயல்படுவார்கள். சிறுதொழில் செய்வோர் புதிய நண்பர்களை ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டு தங்கள் தொழிலினை அபிவிருத்தி செய்துகொள்ள முயற்சிப்பர். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகுந்த முன்னேற்றம் காண்பார்கள். உணவுதானிய வியாபாரிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், பால் வியாபரிகள் நல்ல லாபத்தினைக் காண்பர். வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு ஒன்பதாம் வீட்டு குரு உறுதுணையாய் இருப்பார்.
பரிகாரம் : சனிதோறும் சிவன் சன்னதியை சுற்றி வந்து வழிபடுங்கள்.
Post Comment
No comments
Thank you for your comments