Breaking News

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 : ரிஷப ராசி பொதுப்பலன்கள்

நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர். நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும், புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.


குருவருள் இருந்தால் திருவருள் கூடிவரும் என்பது ஆன்மிக நியதி ;   குரு பார்வை இருந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்பது ஜோதிட விதி.

குரு பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  ஜாதகத்தில் குருபகவான் சுப பலம் பெற்று, நல்ல இடத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் மற்றவர்கள் போற்றும்படியாக வாழ்வர். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, பழக்க வழக்க குணங்கள்  மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் தரும்.

குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து சிறப்பு பார்வையாக  5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். 

💐 குரு பார்வை செய்யும் இடங்கள்
மிதுன ராசி - குருவின் 5ம் பார்வை
சிம்ம ராசி - குருவின் 7ம் பார்வை
துலாம் ராசி- குருவின் 9ம் பார்வை

குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும், தோஷம் விலகி விடும். நீசம் பெற்ற கிரகங்களும் குருபார்வை செய்தால் நீச பங்கம் யோகமாகிவிடும். 

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2-5-7-11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலன்களையே வழங்குவார்.

குரு பெயர்ச்சி காலம் - நேரம் :

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்

பின்பு  குரு அதிர்சார காலம் :

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 27ம் தேதி (13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்திரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு (மாலை மணி 6.22க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான்  மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.

 பின்பு குரு அதிர்சார காலம் :

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

குரு அதிசாரம் என்றால் என்ன?

சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் அவ்வப்போது அதிசார, வக்ர நிலை காரணமாக முன்னும், பின்னும் செல்லும். ஜோதிட விதிப்படி குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இதில் சில காலம் மட்டும் அதிசார நிலைக்கு சென்று வருவார்.

அந்த வகையில் குரு  சாதாரணமாகச் செல்லும் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் நகரத் தொடங்குவதால் தான் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே சமயம் சில காலத்தில் அதன் வேகம் குறைந்து மீண்டும் பழைய நிலைமையை அடைய வேகம் குறையத் தொடங்கும்.

சாதாரண நேரங்களைப் போல் இல்லாமல், தன் பயணத்தில் வேகம் எடுக்கும் குரு ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சியைச் சற்று அதிகமாக வழங்குபவர். அசாதாரண பணிகளைச் செய்யும்போது புகழ் மற்றும் மரியாதையை அடைகிறார்கள்.

குரு பெயர்ச்சிக்கும், குரு அதிசார பெயர்ச்சிக்கும் நிறைய மாற்றங்களுடன் கூடிய பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும். சில ராசிகளுக்கு யோக பலன்கள் குரு பெயர்ச்சியின் போது கிடைக்கும்.  அதுவே அதிசார பெயர்ச்சியின் போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறலாம். சிலருக்கு மோசமான பலன்கள் யோக பலன்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

ரிஷப  ராசி குரு பெயர்ச்சி பொது பலன்கள்
 கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி,
 மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்

சுக்கிரன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..! 

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவரும் வண்ணம் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நல்ல கம்பீரமான தோற்றமும், நடுத்தரமான உயரமும் கொண்டவர்கள். இவர்கள் சர்வ லட்சனங்களும் பொருந்தியவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயற்கையாக சாதுவான குணத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் சண்டை என்று ஒன்று வந்துவிட்டால் இவர்களை வீழ்த்துவது கடினம். இவர்களை நம்பி எந்த விஷயத்தை ஒப்படைத்தாலும் அதில் தனி அக்கறை செலுத்தி பொறுப்பாக இருந்து முடிப்பார்கள். இவர்களுக்கு சுயநலமாக இருபது பிடிக்காது. ரிஷப ராசிகாரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். கலைத்துறை, மற்றும் இசைத்துறையில் நாட்டம் அதிகம் இருக்கும். இவர்கள் மத்திய வயதில் தான் சுக போகமான வாழ்வு அமையும். இவர்கள் மற்றவர்களுக்கு வழிய உதவி செய்வதால் சில சமயங்களில் பிரச்சனைகளில் சிக்கி கொள்வார்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலிருந்து பெயர், புகழ், சமூகத்தில் மரியாதை கிடைக்கவும், சில சுப நிகழ்வுகள் நடக்கவும் உறுதுணையாக இருந்தார். ஆனால் தந்தையோடு சிறு மனஸ்தாபம், பிரச்னைகள், தந்தை வழியில் கருத்து வேறுபாடுகள் என சில சங்கடங்களையும் கொடுத்து வந்தார்

இந்நிலையில் தற்போது குரு பகவான் ராசிக்கு 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், தனித்திறமைகள் வெளிப்பட வாய்ப்புள்ளது. 

இதுவரை உங்களுக்கு கிடைக்காத மதிப்பு, மரியாதை உங்கள் தொழில் மற்றும் பணிபுரியும் இடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. தகுதி வாய்ந்தவருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் சில இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பல வழிகளில் உங்களுக்கு நல்லவிதமான பலன்கள் கிடைத்தாலும், அவ்வப்போது சக ஊழியர்களால் வேலையில் சில சங்கடங்கள், பிரச்னைகள், பணிச்சுமைகள் ஏற்படும் என்பதால் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.கல்வியில் மேன்மையும், நல்ல மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.

கும்பத்தில் இருக்கும் போது குரு தரும் பலன்கள் :

குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்வையிடுவார்.  குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடத்துக்கே அதிகம் நன்மை புரிவார்.

2021 நவம்பர் 13ம் தேதி (ஐப்பசி 27) முதல் 2022 ஏப்ரல் 14 (பங்குனி 30) வரையிலான காலகட்டத்தில்

குரு 5ம் பார்வையாக - ரிஷப ராசியின் 2வது வீடான மிதுனத்தை பார்க்கிறார்...

குரு 7ம் பார்வையாக - ரிஷப ராசியின் 4வது வீடான சிம்ம ராசியை பார்க்கிறார்...

குரு 9ம் பார்வையாக - ரிஷப ராசியின் 6வது வீடான துலாம் ராசியை பார்க்கிறார்...

குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். சுப காரிய முயற்சிகள் வெற்றி அடையும், மகிழ்ச்சி பெருகும். வாகனங்கள் வாங்கு யோகம் உண்டு. சிலர் வீடு, மனை, பழைய வீட்டை புதுப்பித்தல் போன்ற சுப செலவுகளை செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் சுப நிகழ்வுக்காகவும், உங்கள் விருப்பம் நிறைவேற்றும் விதமாக ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் பொருளாதார நிலை உயரும் என்பதால் உங்களின் கடன் பிரச்னைகளை தீர்க்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்து வந்த நோய்கள் தீர்வதற்கான மருத்துவச் சிகிச்சை முன்னெடுப்பீர்கள். உங்களின் மருத்துவ செலவுகளால் உடல் நலம் சிறக்கும்.

அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்:

இரண்டாம் பகுதியாக குரு பகவான் தான் வசித்துக் கொண்டிருக்கும் கும்ப ராசியிலிருந்து அதிசாரமாக, ரிஷப ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக உங்களுக்கு நிதி ரீதியாக உங்களுக்கு சாதகமானதாகவும். பல வழிகளிலிருந்து லாபம் தரக்கூடிய அமைப்பு இருக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு சென்று சென்று வேலை அல்லது தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிலர் புதிய தொழில் அல்லது புதிய வேலைக்கு செல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

குருவின் அதிசார பெயர்ச்சியின் போது குருவின் 5, 7, 9ம் பார்வை, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்கள் மீது விழுகிறது.

5ம் பார்வை ராசிக்கு 3ம் இடமான தைரிய ஸ்தானத்தின் மீது விழுவதால், நீங்கள் குடும்பம், தொழில், வேலை என எல்லாவற்றிலும் தைரியமாக முடிவெடுப்பதோடு, செயல்களையும் உறுதியாக செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பல வழிகளில் உதவிகரமாக இருப்பார்கள்.

ராசிக்கு 5ம் இடத்தை குரு 7ம் பார்வையாக பார்ப்பதால், திருமணமான தம்பதிகளுக்கும், நீண்ட காலமாக குழந்தை வரம் வேண்டுவோருக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து பிரச்சினை நீங்குவதோடு, புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உயர் கல்வி கனவுகள் நினைவாகும்.

குருவின் 9ம் பார்வை ராசிக்கு 7ம் இடமான மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தைப் பார்ப்பதால், நீண்ட காலமாக திருமண தடை ஏற்பட்டவருக்கு கூட விரைவில் திருமணமாக வாய்ப்புள்ளது. உங்களின் தொழில் சிறக்கும். உங்களின் பங்குதாரர் உங்களின் முடிவுக்கு ஆதரவு தருவதோடு, உங்கள் பணியாளர்கள் மிக சிறப்பான ஆதரவை உங்களுக்கு தருவார்கள். இதனால் தொழில் ரீதியான நல்ல லாபம் உண்டாகும். உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி ஒட்டுமொத்தத்தில் முதல் பாதியில் உங்களின் தொழில், வேலை சிறப்பாக செய்வதற்கும், உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் தருவதாக இருக்கும்.

குரு பகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் உங்களின் விரையாதிபதியான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் பலவீனங்கள் பலமாகும். வாழ்க்கைத்துணையோடு அன்பும் அந்நியோன்யமும் அதிகரிகும். நெருங்கிய உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். பிதுர்ராஜ்ஜிய சொத்துகலில் இருந்த சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். திருமண வயதுள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு இதுவரை திருமணம் தடைப்பட்டுக்கொண்டிருந்ததே அந்த நிலை மாறும். மணமாலை கூடிவரும். உறக்கமின்மையால் தவித்தவர்களுக்கு நல்ல உறக்கம் உண்டாகும். சகோதர உறவுகளால் நன்மைகள் நடைபெறும். நண்பர்களோடு பேசி மகிழும் காலம் இது.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு வலிமையை உண்டாக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்துவீர்கள். பங்கு வர்த்தகம் பலன் கொடுக்கும். திட்டமிட்டுக் காய் நகர்த்தி வேலையை முடிப்பீர்கள். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். வீட்டை அழகுபடுத்தும் பணியிலும் விரிவு படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். ஓய்வில்லாமல் திண்டாடுவீர்கள். செலவுகளும் அதிகரித்த வண்ணம் இருக்கும். புதிய பொறுப்புகளை பதவிகளை ஏற்கும் முன்பாக நன்கு ஆலோசனை செய்யுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக வேண்டிவரும். சிலர் உங்கள் மீது அநாவசியமாகப் பழி போட முயல்வார்கள்.


🔥 ரிஷப ராசி பொது பரிகாரம்:

அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரவும். முடிந்தால் அர்ச்சனை செய்யவும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களால் முடிந்தால் அருகில் இருக்கும் குரு பகவானுக்கு சிறப்பு வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவும். உங்களின் குருவான ஆசிரியர்களின் ஆசி பெறுங்கள், மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதி சென்று வழிபட்டு வாருங்கள்.

நட்சத்திர பலன்கள்

கார்த்திகை நட்சத்திரம் 2, 3, 4ம் பாதம் 

இந்த குருப்பெயர்ச்சி உங்களின் உழைப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமையும். உங்களது இயற்கை குணமான படபடப்பு, அவசரம், முன்கோபத்தை ஓரங்கட்டி வைத்து விடுங்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை  கவனம் சிதறாத வகையில் மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் வெற்றி நிச்சயம். 

நிதி :  கடன்பிரச்னை முடிவிற்கு வராவிட்டாலும் கூட பொருளாதார ரீதியாக ஏற்றம் காண்பீர்கள். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். கையிருப்பில் பணமாக வைத்துக்கொள்ளாது அரசுத் தரப்பு நிறுவனங்களில் சேமிப்பாக வைப்பது நல்லது. 

குடும்பம் :   வரும் ஜனவரி முதல் குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் குறையும். உடன்பிறந்தோரின் நலனுக்காக எடுத்து வரும் முயற்சி வெற்றி அடையும். உறவினர் வழியில் உண்டான பிரச்னை தீராமல் இழுபறியாகும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப பெரியவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத செயல்கள் வருத்தம் தரக்கூடும்.

கல்வி :  மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி, மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அவசரப்படாமல் நிதானமாக விடையளித்தால் மட்டுமே நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியும். 

பெண்கள் :   குடும்பத்தில் நிலவிய சலசலப்பு தீர குலதெய்வத்தை வழிபடுங்கள். அண்டை வீட்டாரால் இருந்த பிரச்னை  விலகும். கணவரின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு பெரிதும் துணை நிற்கும். கோபத்தையும் உங்கள் எண்ண ஓட்டத்தையும் மனதிற்குள் அடக்கி வைக்காமல் உடனடியாக வெளிப்படுத்திவிடுவது நல்லது.

உடல்நிலை :  உடல்நலனில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கைகால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, பல்வலியால் அவதிப்பட நேரிடும். நவம்பர் இறுதியில் தொற்று நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதால் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் போது உடனுக்குடன் கவனிப்பது நல்லது.

தொழில் :  குருவின் பத்தாம் வீட்டு சஞ்சாரம் நன்மையைத் தரும். உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் சிறிய பிரச்னைகளை சந்திக்கலாம். ஆயினும்  சுயதொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்காமல் உண்மையாக உழைத்து வாருங்கள். நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

பரிகாரம் :   மாதந்தோறும் கார்த்திகை விரதம் இருப்பது நல்லது.

ரோகிணி நட்சத்திரம் :

மனதில் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்களது உண்மையான உழைப்பினை முழு மூச்சோடு வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உங்களது எண்ணம் அடுத்தவர் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெறும். 

நிதி :  பொருளாதார நிலை உயர்வடையும். உங்கள் சேமிப்பினை அரசு நிறுவனங்களில் வைத்துக் கொள்ளுங்கள். தனியார் நிறுவனங்களிடம் கவனம் தேவை. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.  எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் வந்து சேரும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து புதிய சொத்து வாங்க முற்படலாம்.  

குடும்பம்:  குடும்பத்தில் மகிழ்ச்சி  நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடத்தும் அறிகுறிகளைக் காண்பீர்கள். சகோதரிகளால் செலவுகளை சந்திக்கலாம். ஆயினும் அவர்களால் ஆதாயமும் உண்டு. உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகம் உண்டாகும்  தாயார் வழி உறவுகளுடன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். 

கல்வி :  ஒருமுறைக்கு இருமுறை எழுத்துப்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். வேதியியல், நுண்ணுயிரியல், மரபணுவியல் துறை மாணவர்கள் அபார வெற்றி காண்பர். ஞாபக மறதியால் பிரச்னையை சந்திக்க நேரிடும்.

பெண்கள் :  ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வீண்செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் ஓய்வாக இருக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம்  பேசுவதைத் தவிர்க்கவும். கணவரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. 

உடல்நிலை : உடல் உஷ்ண உபாதையால் அவதிப்படும்.  ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் பரிசோதித்து வருவது அவசியம். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் மனநிலை பாதிப்பு உண்டாகலாம்.

தொழில் : தொழில் ரீதியாக வேலை பளு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்கான முயற்சிக்கு மார்ச் மாதம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்கள் கைகொடுக்கும். சுயதொழில் செய்வோர் நல்ல லாபம் காண்பர்.  

பரிகாரம் : பிரதோஷ நாளில் நந்தியம்பெருமான் வழிபாடும் சிவனடியார்களுக்கு அன்னதானமும் செய்து வாருங்கள்.


மிருகசீரிடம் 1, 2ம் பாதம்:  

உங்களைப் பொறுத்த வரை இந்த குருப்பெயர்ச்சி தொழில்முறையில் சிறிது சிரமத்தினைத் தந்தாலும் இறுதியில் நற்பெயரைப் பெற்றுத் தரும். குருவின் பத்தாம் இடத்து வாசம் உங்களைத் தொழில்முறையில் மேலும் மெருகூட்டும். சிரமப்பட்டு உழைப்பதற்கான நற்பலனை குரு நிச்சயம் தருவார். உங்களின் இயற்கை குணமான வேகமும், பிடிவாதமும் தலையெடுக்கலாம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் முனைப்புடன் செயல்படுவீர்கள். 

நிதி : சேமிப்பு உயரத் துவங்கும். பொருளாதார நிலை உயரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றிக் கொள்ள நிதி நிலை துணைபுரியும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோர் வங்கி சார்ந்த கடனுதவியைப் பெறுவர். வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர் சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். 

குடும்பம் : குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கி மகிழ்ச்சி குடிபுகும். குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் உங்களுக்கான பொறுப்பு கூடும். தாய்வழி உறவினர்களுக்கு அவ்வப்போது உதவி செய்ய வேண்டியிருக்கும். உடன்பிறந்தோரால் பிரச்னைக்கு ஆளாகலாம்.

கல்வி : மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். செய்முறைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் நீங்கள் எழுத்துத் தேர்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ், பொருளாதாரம், ஜர்னலிஸம், பொலிட்டிக்கல் சைன்ஸ் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். 

பெண்கள் : குடும்பத்தில் பொறுப்பு கூடும். வேலைபளுவின் காரணமாக மனதில் ஆயாசம் தோன்றும். கணவரின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் சிரமம் காண்பீர்கள். முன்பின் தெரியாத பெண்களின் நட்பால் எதிர்பாராத பிரச்னை வரலாம். ஏமாற்றுக்கார பெண்களின் பிடியில் சிக்கி பொருளிழப்பு உண்டாகலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும்.

உடல்நிலை : பணிச்சுமையால் சிலர் முதுகுவலி, தோள்வலி பிரச்னைகளுக்கு ஆளாகலாம். தோல் சம்பந்தமான நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள் நிவாரணம் காண்பர். கால்சியம் குறைபாட்டை சரிசெய்யும் வகையில் தினமும் இரவில் பசும்பால் சாப்பிடுங்கள். 

தொழில் : அரசு பணியாளர்கள் தங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவர். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் அதிக லாபம் பெறா விட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றி வெற்றி காண்பர். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை குரு பகவான் நிச்சயம் தருவார். செல்வச் சேர்க்கையில் சிறிதும் குறைவு உண்டாகாது. ஜீவன ஸ்தானத்தில் குரு அமர்வதால் வாழ்க்கைத் தரம் உயரும். உணவு பொருள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல் பொருள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர்.

பரிகாரம் : தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள்.

குரு பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே

க்ருணீ ஹஸ்தாய தீமஹீ

தந்நோ குரு ப்ரசோதயாத்

குருவாகிய அவர் தீமைகளை அகற்றி, நன்மைகளை வழங்கி காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.

ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு செய்யும் பொழுது, குருவுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது சாலச்சிறந்தது.

இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். அஞ்ஞானம் அகலும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வறுமை நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். சேமிப்பு வளரும். உடல் வலிமையும், உள்ள வலிமையும் ஏற்படும். சாதனைகள் புரிய வாய்ப்புகள் அமையும்.


குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இதை வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஜெபிக்கலாம் என்றாலும் வியாழன் அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை கூறி வழிபட நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் எந்த ஒரு விடயத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு “பிரம்மா, விஷ்ணு, சிவன்” என்ற மூன்று கடவுளர்களின் ஆசியும் கிட்டும்.

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச

குரும் காஞ்சன ஸந்நிபம்

புத்தி பூதம் திரிலோகேஸம்

தம் நமமி பிருகஸ்பதிம்

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. 

வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.

முழுபலனும் சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள்  கிடைக்கும்... மற்றும் மாறுபடும்...

No comments

Thank you for your comments