மந்தகதியில் செயல்படும் வேலூர் மாநகராட்சி! - உதவி ஆணையர்களை தேடும் பொதுமக்கள்...!
வேலூர், நவ.14-
வேலூர் மாநகராட்சியில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை, மாறாக மந்த கதியில் செயல்பாடு அமைந்துள்ளது. அதோடு மட்டுமன்றி உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எங்குள்ளனர் என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. கோமா நிலையில் செயல்படும் மாநகராட்சி உத்வேகம் அடைவது எப்போது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது என்கின்றனர் பொதுமக்கள்... தகுதியான உதவி ஆணையர்களை பணிய அமர்த்த வேண்டும் அப்போதுதான் மாநகராட்சியின் பணிகள் சிறப்பாக செயல்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பீடுநடை போட்டு வருகிறது என்ற தோரணை தோல்வி யை தழுவியதா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் பெயரளவிலேயே நடைபெறுவதாக கூறப்படுகிறது.
🎇🎆Also Read குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 :
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியான பாதாள சாக்கடை திட்டத்தால் சாலைகள் பல்லாங்குழியாக மாறியதுதான் நிதர்சனம். இத்திட்டத்தால் வயல் காடாக மாறி உள்ளது சாலைகள்... வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவல நிலையே நீடிக்கிறது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் தடுமாறி கீழே விழும் அவலமே...தொடர்கின்றது...
இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகள் மேலும் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.
இந்நிலையில் முயல் போன்று செயல்படவேண்டிய மாநகராட்சி அதிகாரிகளோ... ஆமை போன்று செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. சாலைகள் சேரு சகதியுமாக குப்பை கூலங்கள் தண்ணிரில் கலந்து தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டிய உதவி ஆணையர்கள் அவரவர் விருப்பம்போன்று பணியாற்றி வருகின்றனர்.
இந்த பேரிடர் காலத்திலும், உதவி ஆணையர்களும் அலுவலகத்துக்கு சரியாக வருவதே இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் தினமும் என்ன பணியாற்றுகின்றனர் என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. அந்தளவுக்கு வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களிலும் பணியாற்றும் உதவி ஆணையர்களுடைய பணி மிகவும் சிறப்பாக உள்ளது. இவர்களை சந்தித்து தங்களுக்கு ஆக வேண்டிய பணிகள், அவர்கள் கையொப்பம் போட வேண்டிய கோப்புகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு கிடக்கின்றன. இதுதான் நிதர்சனம். பலர் இன்றளவும் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் உள்ள புதியதாய் கட்டிய வீடுகளுக்கு வரி செலுத்த முடியாமல் பல மாதங்களாக அல்லல்லபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி ஆணையர் களை கேள்வி கேட்டால் நான் வெளியில் உள்ளேன் என்று கூலாக பதில் கூறி விட்டு இணைப்புகளை துண்டித்து கொள்கின்றனர். நிலைமை இப்படி மோசமான கோமா நிலையில் சென்று கொண்டுள்ளது. தங்களது பாக்கெட்டில் பணம் வந்து கொட்ட வேண்டும் என்றே ஒவ்வொரு அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர்.
அலுவலகத்துக்கு வராமல் வெளியில் இருக்கிறேன் என்று தங்களை தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் அதிகாரிகள், வெளியில் இருக்கிறேன் என்றால் அவர்கள் எங்கிருந்து பணியாற்றுகிறார்கள் என்பது விடை தெரியாத மர்மாகவே உள்ளது.
வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் உதவி ஆணையர்களை பார்ப்பது என்பது அரிதான ஒன்றுதான். இப்படி அதிகாரிகள் பணியாற்றினால் அந்தந்த மண்டலங்களில் எப்படி பணிகள் நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துர்நாற்றமும், கொசுக்களும் உற்பத்தியாகி அதிகளவில் பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர்.
அரசுக்காக மக்களா..?
மக்களுக்காக அரசா..?
-என்ற கேள்வி பொதுமக்கள் பலருக்கும் எழுந்துள்ளது.
இதுபோன்ற ஆமை வேகத்தில் செயல்படும் அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவோரை மாற்றி விட்டு மனம் தளராமல் மக்கள் பணியை செய்பவர்களை வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் உதவி ஆணையர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
மாநகராட்சியின் தலையாய பணி என்பது குப்பைகளை அப்புறப்படுத்துவது, சாக்கடை கழிவுகளை அகற்றுவது, கொசு மருந்து தெளிப்பது, தெரு மின் விளக்குகளை பழுது நீக்குவது மட்டும்தான். இந்த அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றித் தராமல் வேறென்ன பணிகளை மேற்கொள்கின்றனர் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இன்று மக்கள் முன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று எங்கு திரும்பினாலும் குப்பை கூலங்கள் நிறைந்து மலைபோல் குவிந்து காணப்படுகின்றன. சுத்தமாக இருக்க வேண்டிய பகுதிகள் சுகாதாரமற்று தொற்று நோய்களை பரப்பும் இடமாக மாறிவருகின்றன. சுகாதார ஆய்வாளர்கள் என்ன பணியாற்றுகின்றனர் என்பது பரம ரகசியமாக உள்ளது.
கொரோனாவை காரணம் காண்பித்து ஏமாற்றி வந்தனர். முன் ஏர் எப்படியோ அப்படியே பின் ஏர் செல்லும் என்பதற்கு இலக்கணமாக வேலூர் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை ஆய்வாளர்கள், மேஸ்திரிகள் என்று அடிமட்டம் வரையில் ஒரு சிலரை தவிர அனைவருமே பணி செய்யாமல் ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் உடைக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளன. இதில் பல சிமெண்ட் சாலைகளும் அடங்கும். தற்போது அலை அடித்தது போன்று சாலைகள் ரம்பிள்ஸ் என்று சொல்லுவார்கள் அது போன்று மாறியுள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் 10 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி நாற்றமெடுக்கும் நிலைக்கு மாறியுள்ளது. இதை கேட்போர், மேய்ப்போர் யாரும் இல்லாமல் போனதுதான் இதற்கு அடிப்படை காரணம் ஆகும்.
வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் உதவி ஆணையர்களை இன்று வருவாரா, நாளை வருவாரா என்று அவரை பார்க்க பொதுமக்கள் தவமாய் தவம் கிடக்கின்றனர். ஒவ்வொரு மண்டல அலுவலகங்களிலும் வரவேற்பரையில் உள்ள நபர் பொதுமக்களிடம் சொல்வது இன்று போய் நாளை வா என்று மட்டுமே சொல்கிறார். இது தினமும் நடந்து வருகிறது. இதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கால அடிப்படையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையாவது பெயரளவுக்கு செய்யாமல் உண்மையாக செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி கோமா நிலையில் செயல்படுகிறது. ஒரு சில அதிகாரிகள் தான், தான் தோன்றிதனமாக செயல்படுவார்கள். ஆனால் இன்றோ ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக பணியாற்றுவதை காணமுடிகின்றனது. கமிஷன், கலெக்ஷன் என்று பணியாற்றுவதைதான் காணமுடிகிறது என்று பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தில் புலம்புகின்றனர்....
தனிமனித ஒழுக்கமும் நேர்மையும்தான் ஒருவரை மாற்றும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை... ஊர் திருந்தட்டும் பிறகு நான் திருந்துகிறேன் என்று அதிகாரிகள் நினைக்காமல் நான் முதலில் மாறுகிறேன்... மாற்றம் என்னிலிருந்தது ஆரம்பிக்கட்டும் என்று ஒவ்வொரு அரசு அலுவலர்கள் முதல் அதிகாரிகள் வரை நினைக்க வேண்டும். நாடும் மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்... அரசு வழங்கும் திட்டங்களும் முழுமையாக மக்களை சென்று சேரும்...
அமைச்சர்கள், ஆட்சியர், உயரதிகாரிகள் வருகையின் போது மட்டும் தவறாமல் ஆஜராகின்றனர். இந்நிலை என்று மாறும் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது. விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
கோமா நிலையில் உள்ள வேலூர் மாநகராட்சியின் செயல்பாடு உத்வேகம் அடைவேண்டுமென்றால் பொறுப்பு உதவி ஆணையர்களை விடுத்து, தகுதியான உதவி ஆணையர்களை பணி அமர்த்த வேண்டும் அப்போதுதான் மாநகராட்சியின் பணிகள் சிறப்பாக செயல்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments