மக்கள் நீதிமன்றம் முகாம் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் முகாம் நிகழ்ச்சியினை மாவட்ட நீதிபதி -2 திரு U.செம்மல் துவக்கி வைத்து நான்கு குடும்பங்களுக்கு 51 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். 


தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைப்படி, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா  அறிவுறுத்தலின்படி, இன்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் நிகழ்வினை மாவட்ட நீதிபதி எண்-2 திரு செம்மல் துவக்கி வைத்தார். 

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு , வங்கி வாரக் கடன் வழக்கு, காசோலை வழக்கு , நில ஆர்ஜித வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் வகையில் இன்று 500க்கும் மேற்பட்ட வழக்குகள் கையாளப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீட்டுத் தொகைகள் வழங்க விசாரணை நடந்து வருகிறது.

அவ்வகையில் முதல் அமர்வில்,  சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட வாலாஜாபாத் அடுத்த வள்ளிமேடு. சரஸ்வதி பூபாலன்  அவர்களின் மகன் அப்பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் இறந்த  நிலையில்  அக்குடும்பத்திற்கு  22 லட்ச ரூபாயும், ஓரிக்கை பகுதி விபத்தில் காயமடைந்தவருக்கு ஆறு லட்சத்து 70 ஆயிரம் , ஏனாத்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட விமல்ராஜ் குடும்பத்திற்கு 18 லட்சம், காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் காப்பீட்டுத் தொகை காசோலைகளை நீதிபதி செம்மல் உள்ளிட்ட நீதிபதிகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் சட்ட பணி குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதி கே .எஸ் அருண்சபாபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி ராஜேஸ்வரி, நீதித்துறை நடுவர் ஜே.வாசுதேவன், வழக்கறிஞர்கள் பழனி, சத்யமூர்த்தி ,  குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி   மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட நபர்கள், நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments