கோவைக்கு இல்லை கோடை சிறப்பு ரயில்... ரயில்வே துறை பாகுபாடு
கோவை, ஏப்.12-
கோவை மாவட்டம் கோடை விடுமுறைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், கோவையை ரயில்வே நிர்வாகம் புறக்கணித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும், ஏப்., மற்றும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். இதையடுத்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால், பஸ், ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் அலைமோதும்.
கோடை கூட்ட நெரிசலை சமாளிக்க, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல், ரயில்வே துறையும் பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கும்.இந்தாண்டு ஏப்., துவங்கியுள்ள நிலையில், கோடை விடுமுறைகள் விரைவில் துவங்க உள்ளன.
கொரோனாவால், பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை கழிக்க பலரும் தற்போதே திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாலக்காடு, எர்ணாகுளம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால், தொழில் நகரமான கோவையில் இருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு தினமும், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், கோவை ரயில்வே ஸ்டேஷன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருகிறது. இருப்பினும், சிறப்பு ரயில் இயக்குவதில் அக்கறை இல்லை. இது, பல்வேறு தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Post Comment
No comments
Thank you for your comments