கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து - வேனை 50 மீ. இழுத்துச் சென்றது ரயில்
கடலூர் :
வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவனும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் இன்று (ஜூலை 8, 2025) காலை 7.40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பள்ளி வேன், ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற போது, அந்த தண்டவாளத்தில் வந்த விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. பள்ளி மாணவர்கள் எடுத்துச் சென்ற புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன.
பள்ளி வேன் மீது மோதிய ரயில், அந்த வேனை 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. அதில் பயணித்த 2 மாணவர்கள் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
No comments
Thank you for your comments