குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது...? நகராட்சி, பேரூராட்சி தேர்தல் கணக்கு!
சென்னை:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக அளிக்கப்படும் என்பதுதான்.
மே மாதம் ஆட்சி அமைத்து ஏழு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அதுபற்றிய அறிவிப்பை அரசு இன்னும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என்று உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் கடுமையாக கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த திமுக அமைச்சர்கள், “அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் நிதி நிலைமை பாதாளத்துக்கு போய்விட்டது.அதை சரிசெய்துவிட்டு மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை இன்னும் மூன்று மாதங்களில் கொடுப்போம்” என்று அக்டோபர் மாதம் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த உரிமைத் தொகையை வழங்குவதற்கான தகுதிகளை இறுதி செய்து அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, “ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சாரத்தை கடுமையாக முன் வைத்தனர். அதனால் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கான உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் நிதி நிலைமை பற்றிய கவலையும் ஒருபக்கம் இருக்கிறது. நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் முதல்வர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அப்போது நிதியமைச்சர், ‘பல கட்டுப்பாடுகளுடன் இந்தத் திட்டத்தை நாம் துவக்கலாம். எல்லா பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போவதில்லை. மேலும் நாம் கொடுக்கப் போகும் ஆயிரம் ரூபாய் என்பது தற்போதைய விலைவாசி நிலையில் உடனடியாக சந்தையில் புழக்கத்துக்கு வந்துவிடும். யாரும் இதை சேமிக்க முயலமாட்டார்கள். சந்தையில் புழக்கத்துக்கு வரும்போது கணிசமான வரி வருவாயாக அரசுக்கே அது திரும்பக் கிடைக்கும். எனவே குறைந்த பட்ச பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தை பொங்கல் முதல் கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
இதன் அடிப்படையிலேயே பொங்கலுக்கு அறிவித்த பரிசில் பொருட்கள் மட்டுமே இடம்பெற்றன. கடந்த ஆட்சி போல பணம் இடம்பெறவில்லை. பெண்களுக்கான உரிமைத் திட்டத்தைத் துவக்கி வைத்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திட்டமிருக்கிறது” என்கிறார்கள்.
Post Comment
No comments
Thank you for your comments