Breaking News

தேவரியம்பாக்கத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்-எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம், ஜூலை 3:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உத்தரமேருர் எம்எல்ஏ க.சுந்தர் வியாழக்கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கி புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. 

புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதன் தொடர்ச்சியாக தேவரியம்பாக்கத்தில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு அதன் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார்.

சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி,மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வாலாஜாபாத் ஒன்றியக்குழுவின் துணைத் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.புதிதாக திறந்து வைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால் தேவரியம்பாக்கத்தை சுற்றியுள்ள உள்ளாவூர், வாரணவாசி, குன்னவாக்கம், நத்தா நல்லூர்,வெண்பாக்கம்,தொள்ளொழி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள் எனவும் எம்எல்ஏ க.சுந்தர் பேசினார்.

விழாவில் வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments