ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது சிறுமி..
தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை, அதே ஆண் நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது மகள் கொலை செய்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வண்ணார் தெருவைச் சேர்ந்த முனியலட்சுமி என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். சனிக்கிழமை இரவு போலீசாரை தொடர்பு கொண்ட முனியலட்சுமியின் மூத்த மகளான 17 வயது சிறுமி, யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முனியலட்சுமியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியலட்சுமியின் மகள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த நிலையில், தாய் முனியலட்சுமியை அவரது மகளே, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போலீசாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
படிப்பை பாதியிலேயே விட்ட முனியலட்சுமியின் மூத்த மகளான 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், தங்கம்குமார் உள்ளிட்ட பல இளைஞர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. பதின்பருவ ஈர்ப்பால் ஆண் நண்பர்களை அடிக்கடி நேரில் சந்திப்பதையும், அவர்களுடன் இரவு நேரங்களில் செல்போனில் மணிக்கணக்கில் உரையாடுவதையும் வழக்கமாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதில், கண்ணன் என்பவனுடன் சிறுமிக்கு காதல் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் தெரிந்ததும் முனியலட்சுமி தனது மகளை கண்டித்ததாகவும், அதனை சட்டை செய்து கொள்ளாத சிறுமி அதற்கு பிறகும் கூட ஆண் நண்பர்களுடன் விடாமல் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், தாய் - மகளுக்கு இடையே அடிக்கடி சண்டையும், சச்சரவும் ஏற்பட்டுள்ளது. ஆண் நண்பர்களுடன் பேசுவதையும், பழகுவதையுமே மட்டுமே சுதந்திரமாக நினைத்துக் கொண்ட அந்த சிறுமி, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தனது தாய் மீது வெறுப்பை கக்கி, சண்டையிட்டு வந்திருக்கிறார். இந்த வெறுப்பு தான் நாளடைவில் கொலை செய்யும் அளவுக்கு தூண்டியிருக்கிறது.
சம்பவத்தன்று, தனது தங்கைகளும், தம்பியும் வார விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த சிறுமி, ஆண் நண்பர்களை வரவழைத்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆண் நண்பர்களான கண்ணன், தங்கம் குமாரிடம் பேசிய சிறுமி அவர்களை வீட்டுக்கு வரவைத்ததாக சொல்லப்படுகிறது. தங்கம் குமார் அவனது மற்றொரு நண்பன் கோடா என்பவனையும் கூட்டி வந்துள்ளான்.
பின்னர், அக்கம்பக்கத்தினருக்கு சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக முனியலட்சுமியின் கையை கட்டிவிட்டு, வாயை அவரது மகள் மூடிக் கொண்ட நிலையில், மற்ற மூவரும் அவரை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சிறுமியை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த கண்ணன், தங்கம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து மற்றொருவனை தீவிரமாக தேடி வருகின்றனர். கண்ணன், தங்கம்குமாரிடம் சிறுமி பேசியது என்ன? என்ன சொல்லி வீட்டுக்கு வரவைத்தார் என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி நகரப்பகுதியில் தொடர்ச்சியாக கொலை சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் பெற்ற தாயை மகள் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post Comment
No comments
Thank you for your comments