இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் பி.வி. கரியமால் (96) காலமானார்
தருமபுரி :
1929 ஜனவரி 1ஆம் தேதி பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரின் கொள்கைகளை தனது வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கார் சிந்தனைகளை பரப்ப பணியாற்றியவர்.
தனது சொத்துக்களை சமூகப் பணிக்காக அர்ப்பணித்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கும், இரட்டை டம் குவளை முறைக்கும், பஞ்சமி நிலம் மீட்பு போராட்டங்களுக்கும், கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைச் செயல்களுக்கும் எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டார்.
1959ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மண்டல தலைவராகப் பொறுப்பேற்ற இவர், தொடர்ந்து மாநிலத் தலைவராக பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் எழுப்பியவர். 96 வயதான நிலையிலும், மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான பாப்பிசெட்டிப்பட்டியில் வைக்கப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கத்தினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு நாளை மாலை நடைபெறுகிறது என்று கருமலை, இந்திய குடியரசு கட்சி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments