Breaking News

காஞ்சிபுரத்தில் காப்பீட்டு நிறுவனத்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்


காஞ்சிபுரம்,செப்.16:

விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்ற உத்தரவின்படி தர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் நீதிமன்ற பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை காப்பீட்டு நிறுவனத்திலிருந்த பொருட்களை ஜப்தி செய்தார்கள்.





காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் எம்.குமரவேல். இவர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கார் இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.

இச்சம்பவம் கடந்த 28.2.1999 ஆம் ஆண்டு நடந்தது.இதனையடுத்து அவர் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். 


வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.குமரவேலுக்கு ரூ.ஒரு லட்சம் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது. இத்தொகை குறைவு என்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகா தேவன் ரூ.ஒரு லட்சத்துடன் வட்டி சேர்த்து ரூ.1.20 லட்சமாக வழங்க உத்தரவிட்டார். 

இத்தொகையை காப்பீட்டு நிறுவனம் செலுத்தாமல் இருந்து வந்ததால் குமரவேல் காஞ்சிபுரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்தார். 

இதனையடுத்தும் தொடர்ந்தும் இழப்பீட்டுத் தொகையை மனுதாரருக்கு செலுத்தாமல் இருந்து வந்ததால் காஞ்சிபுரத்தில் காமராஜர் சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன மண்டல அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு காஞ்சிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி உத்தரவிட்டார்.

அவரது உத்தரவைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற பணியாளர்கள் அலுவலகத்திலிருந்த கணினி,மேஜை,நாற்காலி ஆகிய பொருட்களை ஜப்தி செய்தார்கள்.

No comments

Thank you for your comments