காதலித்து திருமணம் செய்த இளம் பெண்ணின் சாவில் மர்மம் – மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்
தருமபுரி :
நல்லம்பள்ளியைச் சேர்ந்த பரத் (ஜேசிபி ஓட்டுநர்) மற்றும் பொம்மிடி அருகே தாசரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா (கூலி தொழிலாளி மகாலிங்கம் – எழிலரசி தம்பதியினர் மகள்) ஆகியோர் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
2020ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், மூன்று மாதங்களிலேயே உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்தது. பின்னர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நிலையில், காதணி விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த 4ம் தேதி கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பரத் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து ஸ்ரீபிரியா காணாமல் போனதாக பரத்தின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின், சனிக்கிழமை தருமபுரி அருகே உள்ள ராமக்காள் ஏரியில் ஸ்ரீபிரியா சடலமாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை அறிந்த ஸ்ரீபிரியாவின் உறவினர்கள், “மரணத்தில் மர்மம் உள்ளது; வரதட்சணை கொடுமையால் அடித்து கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம்” என குற்றம் சாட்டி, மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்கள், “பரத் மற்றும் அவரது உறவினர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம்” என வலியுறுத்தினர். இதனால் மருத்துவமனை மற்றும் காவல்துறையில் பரபரப்பு நிலவியது.
பேட்டி:
- ஸ்ரீ நிஷா (சகோதரி)
- மகாலிங்கம் (தந்தை)
No comments
Thank you for your comments