தூத்துக்குடி விஏஓ பிரான்சிஸ் படுகொலை - ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
தூத்துக்குடி வி.ஏ.ஓ. பிரான்சிஸ் படுகொலை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் அப்பகுதியில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து நிறுத்தி அது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதில் ஏற்பட்டுள்ள விரோதம் காரணமாக நேற்று நீதிமன்ற பணியை முடித்துவிட்டு கிராம நிர்வாக அலுவலர் இருந்தபோது அலுவலகத்திற்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பலியானார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அரசு ஊழியர்களின் கண்டனத்தையும் பெற்றது. இந்நிலையில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் எனவும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இதற்கு பெரும் கண்டனம் தெரிவித்து மாவட்டம் தோறும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்து இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை உடனடியாக கைது செய்து அதற்கான சரியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் கோரி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தோழமை சங்கங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைமை நிலைய செயலாளர் தியாகு முன்னிலையிலும் வருவாய் அலுவலர் சங்கம் கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தோழமை சங்கங்கள் என 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் உரையாற்றிய நிர்வாகிகள், வருவாய்த்துறை ஊழியர்கள் மீது தொடர்ந்து அதிக பணி சுமை அளித்து வருவதும் அதற்கான எந்த ஒரு பாதுகாப்பும் வழங்காமல் அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும், கொரோனா காலத்தில் பொது மக்களை பாதுகாக்க கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் 24 மணி நேரமும் பணிபுரிந்து அதில் பல உயிர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை சார்ந்த பணிகளையும் வருவாய்த்துறை ஊழியர்களே செய்ய வேண்டும் என்பதால் அதற்கு உண்டான எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அரசு எடுக்கவில்லை என்பதை அனைவரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டாகவே தெரிவித்தனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் நன்றியுரை தெரிவித்தார்.
Post Comment
No comments
Thank you for your comments