Breaking News

நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளின் குறித்த ஆய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின்  குறித்த  ஆய்வுக் கூட்டம்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு  அவர்கள் தலைமையில், மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் முன்னிலையில்  இன்று (18.08.2022) நடைபெற்றது

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின்  குறித்த  ஆய்வுக் கூட்டம்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு  அவர்கள் தலைமையில், மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதியினை நேரடியாகவும், உடனடியாகவும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு வழங்கும், பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திறகு ரூ.1000 கோடியும், நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.400 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.



எந்தெந்த பகுதிகளில் எவ்வாறான திட்டங்கள் உடனடியாகத் தேவை என்பது குறித்து மாநகராட்சி மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தால், அது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அனுமதி பெற்று விரைவாக திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதோடு, அனைத்து பகுதிகளுக்கும் மழை நீர் வடிக்கால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை மேம்படுத்தி நிலத்தடி நீரினை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டங்களை விரைவாக முடித்திடவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் குடிசைப் பகுதிகளில் உள்ள இடங்களில் சாலை, தெருவிளக்கு மற்றும் கழிவறை வசதிகளை முழுமையாக எங்கெல்லாம் ஏற்படுத்த முடியுமோ அங்கெல்லாம் ஏற்படுத்துவதுதான் அரசின் நோக்கமாகும் அனைத்து பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் துறை செயல்பட்டு வருகின்றது அந்த வகையில் பொது மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கச் செய்வதே நகராட்சி நிர்வாகத் துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.



பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்திற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் குப்பைகள் சேரும் இடத்திலேயே அதனை மக்கும் குப்பைகள் எனில் உரத்திற்காகவும், மக்காத குப்பைகள் எனில் மின்சாரமாக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக நகராட்சி நிர்வாகத் துறையின் செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் இந்தியாவில் இத்திட்டம் சிறப்பாக மேற்கொண்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு வந்துள்ளார்கள். அதுபோன்று நம்முடைய பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

 நம்முடைய பணி என்பது நமது நகரத்தைத் தூய்மையாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மாற்றி, அனைத்துத் தேவைகளையும் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்டத்தினை சார்ந்த மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் பேரூராட்சித் தலைவர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு கே.என். நேரு அவர்கள் தெரிவித்தார்கள்.

மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பேசியதாவது:

மக்கள் பிரதிநிதிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை அறிந்து அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை நிச்சயமாக செய்து தருவோம் என உத்திரவாதம் அளித்துள்ளார்கள். அதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகளான ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தப்படுத்தினால் நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளது. இதனால் சுற்றி உள்ள நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சனைக்கு ஒரளவு தீர்வு காண முடியும்.

இங்கு அனைத்து பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், மேயர்,  துணை மேயர்கள்  அனைவரும் தங்கள் பகுதியில் சாலை வசதிகள், மழைநீர் வடிகால்,  மின் மயானங்கள்,  விளக்கு வசதி, குடிநீர் வசதிகள் வேண்டும் என்று கூறியதற்கேற்ப,  எந்தந்த இடத்தில் குடிநீர் பிரச்சினைகள் இருக்கிறதோ அதனை கவனத்தில் கொண்டு  குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான  திட்டங்களை மாண்புமிகு  முதலமைச்சர் அவர்களிடம் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு காண நடைவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ்மீனா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப.,  பேரூராட்சிகளின்  ஆணையர்  டாக்டர்.இரா.செல்வராஜ், இ.ஆ.ப.,   காஞ்சிபுரம் நாடாளுமன்ற  உறுப்பினர் திரு.க.செல்வம்,  உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்,  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எம்.வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். 

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments