நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் குறைதீர்ப்பு முகாம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம், நஞ்சப்பா ரோடு, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மனைப்பிரிவு, கட்டிட அனுமதி தொடர்பாக நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் பெற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார், எஸ். மக்வானா, இ.ஆ.ப., நகர்புற வளர்ச்சித் துறை இயக்குநர் சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., நகர ஊரமைப்பு துணை இயக்குநர் வாழவந்தான், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறையிலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும், மக்களுக்கு பயன்தரக்கூடிய அரசு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மனைப்பிரிவு, கட்டிட அனுமதி தொடர்பான பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மனைப்பிரிவு, கட்டிடங்களுக்கான அனுமதி அளிப்பதில் ஒற்றை சாளரமுறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
முதலமைச்சர் பொதுமக்கள் தங்களுடைய வீட்டிலேயே இருந்து, தங்களின் மனைகள் மற்றும் கட்டிடங்களுக்கு அனுமதி பெறும் வகையில், அடிப்படை பணிகளை செய்யுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதனடிப்படையில், அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சீரமைப்புகளை கொண்டு வர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் மனைப்பிரிவு, கட்டிட அனுமதி தொடர்பாக மனுக்களை கொடுக்கும்போது, ஒரே நேரத்தில் உரிய அனைத்து ஆவணங்களையும் இணைத்து கொடுக்கவேண்டும். ஒரு மனுவின் மீது நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு உயர் அலுவலர்களிடமும் சென்று பிறகு உரிய ஆவணங்கள் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டு, அதன்பிறகு மறுபடியும் ஆவணங்கள் இணைத்து அனுப்பும்போது அதிகப்படியான வேலைப்பளு ஏற்படுகிறது.
இதனை சரிசெய்யும் வகையில் அரசாங்கம் மற்றும் பொது மக்கள் என இருதரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒரு கோப்பு வரும்போது முதலில் பார்க்கும் போதே தேவையான அனைத்து விவரங்களும் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளதா, மனுவில் கோரி உள்ள விவரங்கள் தொடர்பாக ஒரே நேரத்திலேயே அந்த மனுதாரிடம் அனைத்து விவரங்களையும் பெறவேண்டும். ஒரு கோரிக்கை பெற்று, பிறகு, ஒரு வாரம் கழித்து அடுத்த ஆவணங்களுடன் இணைத்து மறுபடி ஒரு கோரிக்கை மனு கேட்பது என்பது தவிர்க்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வேலைப்பளு குறைவதுடன் காலம் விரையமும் ஆகாது.
இது அரசு துறையின் சார்பில் செய்கின்ற பணி மட்டுமல்ல மனுதாரர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதனை முழுமையாக செய்யமுடியும்.
மேலும், நடைமுறை சிக்கலை தெரிந்து கொள்ளவும், அதை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து, இது போன்ற முகாம்கள் நடத்துகிற பொழுதுதான் மனுதாரர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இம்முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்களை ஆராய்ந்து தகுதியான மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments