Breaking News

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தமிழ்செல்வி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், தோட்டக்கலை துணை இயக்குநர், புவனேஸ்வரி, வேளாண் விற்பனை துணை இயக்குநர் சுந்தரவடிவேல், வேளாண்பொறியியல் துறை துணை இயக்குநர் ஞானமுருகன், உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டங்கள் அனைத்தும் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சிறப்பாகவும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறையின் வாயிலாக சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்கள் பரப்பு அதிகரித்தல், நீடித்த நிலையான மானவாரி இயக்கம், உணவு தானிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



ஒட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்த வயதான பெண் விவசாயிக்கு மாவட்ட ‌ஆட்சித்தலைவர் உத்தரவின் படி உடனடியாக தனிநபர் குடும்ப அட்டை வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

பொள்ளாச்சி ஆவல்பட்டி பிரதான சாலை பகுதியில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவிடப்பட்டது. சின்னவேடப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்காலில் மாநகராட்சியின் மூலம் எட்டு இடங்களில் சாக்கடை கழிவு நீர் சேர்க்கப்படுவதை தடுக்க கோவை மாநகராட்சி நிர்வாகமும் பொதுப்பணித் துறையினரும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

பொள்ளாச்சி ஆச்சிபட்டி பகுதியில் கண்டறியப்பட்ட போலியான பொட்டாஷ் தயாரிக்கும் தொழிற்சாலையை சார்ந்த நபர்கள் மீது தக்க சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். தொண்டாமுத்தூர் ஒன்றியம் விராலியூர் பகுதியில் விவசாயிகள் செல்லும் பாதை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உழவர் சந்தை இல்லாத பகுதிகளில் உழவர் சந்தைகள் அமைத்து விரிவாக்கம் செய்ய விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். சனிக்கிழமை தோறும் கூடும் அன்னூர் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரப்பட்டது.

இது தவிர இக்கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்திடி நீர் உயர்த்திட நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகள் சரி செய்தல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டார்.

No comments

Thank you for your comments