வளர்ச்சிப்பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஆணையர் நேரில் ஆய்வு..
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல பகுதியில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.42க்குட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றுவரும் சிறப்பு தூய்மைப்பணியை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள், தெரிவித்ததாவது, "கோவை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களிலும் மண்டலத்திற்கு 20 தூய்மைப்பணியாளர்கள், 20 கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டு தினமும் ஒவ்வொரு மண்டலத்திலுள்ள 3 இடங்களைக் கண்டறிந்து சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், மரக்கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளை மேற்கொள்வதுடன் கொசு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு சுத்தம் செய்வார்கள்.
ஒரு மண்டலத்திற்கு 3 இடங்கள் வீதம் தினமும் 15 இடங்கள் சுத்தம் செய்யப்படும். வாரத்திற்கு 90 இடங்கள் சுத்தம் செய்ய மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும். மேலும், பொதுமக்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும். மீறினால் மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் விதிக்கப்படும்.” என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அத்திப்பாளையம் சாலை. சின்னவேடம்பட்டி பகுதியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்து, ஆய்வு மேற்கொண்டார். பின்னர், உடையாம்பாளையம் பகுதியில் பயன்படுத்தாமல் இருந்த உள்விளையாட்டரங்கத்தையும் பார்வையிட்டு, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, வார்டு எண்.47க்குட்பட்ட கணபதி, கணேஷ் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியின் கட்டிடத்தன்மை மற்றும் தரம் குறித்தும், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, தரமற்ற கட்டிடங்கள் உள்ளதா என்பதை பொறியாளர்கள் ஆய்வு செய்து. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த பட்டியலை விரைவில் அறிக்கையாக வழங்க வேண்டுமென மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments