கொடிநாள் நிதி அதிகமாக வசூல் செய்த மாவட்ட அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் ...
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாளை முன்னிட்டு
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் நிதிவசூல் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., மாநகர காவல் துணை திருமதி.உமா, இ.கா.ப., முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.ராஜலட்சுமி, லெப்டினன் கர்னல்(ஓய்வு) எஸ்.சாரதிமற்றும் முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது,
இந்திய நாட்டின் முப்படைகளிலும் பணியாற்றி நமது தாயகத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் நாளான்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
படைவீரர் கொடிநாள் கொண்டாடப்படும் டிசம்பர் 7 அன்று கொடிநாள் நிதி வசூல் துவக்கப்பட்டு அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்கு தொகை அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடும் எய்தப்பட்டு வருகிறது. படைவீரர் கொடிநாள் நிதியாக வசூலிக்கப்படும் தொகையிலிருந்து முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோரது நலனுக்கென மைய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 4371 முன்னாள் படைவீரர்களும் 2070 விதவையர்களும் உள்ளனர்.
கடந்த ஆண்டு 07.12.2020 அன்று துவக்கிய படைவீரர் கொடிநாள் 2020-க்கான இலக்காக கோவை மாவட்டத்திற்கு அரசு ரூ.1,09,82,000/ நிர்ணயித்தது. மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களின் முனைப்பான செயல்பாடுகள் காரணமாக அரசின் இலக்கை விட கூடுதலாக அதாவது 146சதவீதம் அளவிற்கு ரூ.1,59,87,500/- வசூல் செய்யப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்திற்கான கொடிநாள் 2021-க்கான நிதிவசூல் இலக்காக ரூ.1,31,78,000/- அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான நிதிவசூல் துவக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வருடமும் படைவீரர் கொடி நாள் நிதிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைவிட கூடுதலாக வழங்கிட கேட்டுக்கொள்கிறேன். என மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கொடிநாள் நிதி அதிகமாக வசூல் செய்த மாவட்ட அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கமும், தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ்களையும், போர் விதவையர், போரில் ஊனமுற்றோர் மற்றும் வீரவிருது பெற்றவர்களுக்கு அன்பளிப்பினையும், முன்னாள் படைவீரரின் வாரிசுதாரர்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25,000/-வீதம் இரண்டு நபர்களுக்கும், முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களான 15 மாணவ மாணவிகளுக்கு ரூ.3.40/-இலட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, முன்னாள் படைவீரருக்கு ரூ.16,771/- மதிப்பிலான வங்கி கடன் வட்டி மானியம், முன்னாள் படை வீரரின் மனைவிக்கு (வாழ்நாள் முழுவதும் பிரதிமாதம்) ரூ.4000/- மாதந்திர நிதி உதவித்தொகை என மொத்தம் ரூ.4.10/- இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
No comments
Thank you for your comments