கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
அரூர், டிச. 4:
கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டரங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலர் பொ.பொன்னுசாமி தலைமை வகித்தார்.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் டி.ரவீந்திரன் பேசுகையில், உரம், யூரியா உள்ளிட்ட வேளாண் இடு பொருள்களின் விலைகள் அதிகம் அளவில் உயர்ந்துள்ளது.
ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மஞ்சள், நெல், வாழை உள்ளிட்ட வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.
இதில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் வே.விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சிங்காரம், துணைச் செயலர் சி.வஞ்சி, அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.ராமலிங்கம், கௌரவத் தலைவர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments