Breaking News

4வது இடத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

இந்திய அளவில் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களுக்கிடையே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2020 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தரவரிசையில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகமானது இந்தியாவில் பரவியுள்ள 67 வேளாண் நிறுவனங்களில் எட்டாவது இடத்தையும் தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது .

பல்கலைக்கழக ஆசிரியர்களின் சீரிய பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் அதிகளவிலான இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி ஊக்கத்தொகை எண்ணிக்கையை பெற்றதன் மூலம் கல்விப்பரிமாணத்தில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. 

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதை ஒரு சவாலாக ஏற்று ஆராய்ச்சி கட்டுரைகளை சீரிய முயற்சிகள் மற்றும் திட்டமிடல் மூலம் அதிக அளவில் பிரசுரித்து நிதி ஆதாரங்களையும் பெருக்கியதன் மூலம் ஆராய்ச்சிப் பரிமாணத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற முடிந்தது. 

இளம் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு விருதுகளை பெற தீவிர ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சியின் மூலம் அதிக காப்புரிமைகளை பெற்றதன் மூலமும் மதிப்பெண்களை அதிகரிக்க முடிந்தது.

வேளாண் விரிவாக்கத்தில் அதிக அளவிலான செயல் விளக்கங்கள், வானொலி உரைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. 

மேலும், இடுபொருள் வணிகர்கள், அரசு சாரா அமைப்பினர் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருக்கு அதிகளவிலான பயிற்சிகள் வழங்கியது, அதிக கிசானி அழைப்புகளை உயர்த்தியது, தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கான கைபேசி ஆலோசனை சேவைகளை வழங்கியது, அதிக அளவிலான காணொலி காட்சிகளை உருவாக்கியதன் மூலமும் அதிக மதிப்பெண்களை பெறமுடிந்தது.

அதிக அளவிலான சர்வதேச மாணவர்களை ஈர்த்ததன் மூலமும் மாணவர்களின் பன்முக தன்மையை அதிகரித்து மதிப்பெண்களை கூட்ட முடிந்தது. மேலும் தரவரிசையில் முன்னேற்றத்தை பெறுவதற்காக தொழில்நுட்ப இயக்குநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்கள் மூலம் பல்கலைக்கழகம் பின்தங்கிய அளவுகோல்களை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த தரவரிசை மூலம், பல்கலைக்கழகம் நிதிகளை ஈர்ப்பதற்காகவும், இன்னும் கூடுதலாக சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்காகவும், கூட்டு ஆராய்ச்சிக்கான கூடுதல் வழிகளுக்காகவும், உலக அரங்கில் தன்நிலையை மேம்படுத்தவும் உதவும். இனிவரும் நாட்களில் பல்கலைக்கழகம் முதல் மூன்று இடங்களில் இடம் பெற முனைப்புடன் செயல்பட்டு உச்சத்தை எட்டும் என்று பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் முனைவர் அ.சு. கிருட்டிணமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments