Breaking News

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை...மிரட்டும் திமுக அதிமுக-வினர் ... மிரளும் குடியிருப்புவாசிகள்...

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி  கோயில்மேடு பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக  இருளர், பழங்குடியினர், இஸ்லாமியர், வன்னியர்  மக்கள் வசித்துவருகின்றனர்.   சாலை அகலப்படுத்தும் பணிக்காக மாற்று இடம் வழங்காமல்  வீடுகளை காலி செய்யுமாறு  திமுகவினர்,  அதிமுகவினர், ஒப்பந்ததாரர்கள் என வரிசைகட்டி மிரட்டுகின்றனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தருமரி மாவட்டம்,  மாரண்டு அள்ளி அருகேயுள்ள பஞ்சப்பள்ளியில் சின்னாறு செல்லும் சாலையோரத்தில், கோயில்மேடு   பகுதியில்  கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இருளர் பழங்குடியினர் இஸ்லாமிய வன்னியர் உட்பட 11 குடும்பத்தினர்  வீடுக்கட்டி வசித்து வருகின்றனர்.  

போதிய வசதியின்மை காரணமாக ஒரு வீட்டில்  இரண்டு மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இப்பகுதி வாழ் மக்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  சின்னாறு அணை முதல் பஞ்சப்பள்ளி வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணி நடைபெற்று வருகிறது. 

கோயில்மேடு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களை  சாலைபோடும் ஒப்பந்ததாரர் மற்றும்  அப்பகுதியிலுள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகியோர்  திடிரென வீடுகளை அப்புறப்படுத்துங்கள் என நோட்டீஸ் கொடுத்து விட்டு மறுநாளே வந்து வீடுகளின் மின் இணைப்பை துண்டித்து விட்டனர்.   

மாற்று இடம்  வழங்காமல்  வீடுகளை காலி செய்யுங்கள் என கூறியதால்  போக்கிடம் இன்றி அப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுயதாவது,  70 ஆண்டுகளுக்கு மேலாக   நாங்கள் இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்   சாலை அகலப்படுத்தும்  பணி நடப்பதாக  கூறி, எந்தவொரு  முன்னறிவிப்பும் இன்றி  அளவீடு செய்யாமல்  வீடுகளை காலி செய்ய சொல்கின்றனர்.  எங்களுக்கு குடியிருக்க  மாற்று இடங்கள் வழங்காமல் திடிரென வீடுகளை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே செல்வது...  

வீடுகளை காலி செய்யவில்லை என்றால் இரவு நேரங்களில் வீடுகளில் தூங்கிகொண்டிருக்கும் போது ஜேசிபி  மூலம் வீடுகளை இடித்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். 

குடியிருக்கும்  இடத்திற்கு எதிரே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதன் வழியாக சாலை அமைக்காமல் எங்கள் குடியிருப்பை இடித்துவிட்டு சாலை அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளனர்...

வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்காமல் வீடுகளை அப்புறப்படுத்த சொல்லி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள்  வாழ்வறியாது நிற்கின்றனர்.

ஆட்சி மாறியும், காட்சி மாறாத நிலையே நீடிக்கின்றது... அதிமுக வினர் திமுகவினர், ஒப்பந்ததாரர்கள் என்று மிரட்டும் அவலம்தான் தொடர்கதையாக உள்ளது. 

தமிழக முதலமைச்சர்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மாற்று இடம் வழங்க வேண்டும்  என்றும்   போக்கிடம் இன்றி வாழ்வறியாது நிற்பதாக  அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வறியாமல் நிற்கும் மக்களின் குமுறல் சத்தத்திற்கு மாவட்ட ஆட்சியர் செவிமடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...

🔏செய்தியாளர் இளம்பரிதி

No comments

Thank you for your comments