கீழடியில் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடியில் பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.10.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் ஐந்து கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம், தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும், கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் போன்ற பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை அறிவித்து, அது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, கீழடி நாகரிகத்தின் தொன்மையையும், பண்பாட்டினையும் முழுமையாக உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மூலமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் கீழடி அகழாய்வுத் தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (29.10.2021) நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வுகள் விளக்கக் காட்சியினை (Presentation) பார்வையிட்டார்.
தற்போது ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
🔥Also Read
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் நான்கு கட்டங்களாக கீழடி அகழாய்வுகளில் இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ள 11,470 தொல்பொருட்களில், முக்கியத்துவம் நிறைந்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர், கீழடியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள 8 அகழாய்வுக் குழிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு, அகழாய்வுப் பணிகள் குறித்த விவரங்களை தொல்லியல் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், சிவகங்கை மாவட்டம், கொந்தகை கிராமத்தில் கீழடி தொல்பொருட்களைக் காட்சிப்படுத்திட பொதுப் பணித் துறையின் மூலம் ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. மதுசூதன் ரெட்டி, தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) முனைவர் இரா. சிவானந்தம், தொல்லியல் வல்லுநர் ராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
🔥Also Read
No comments
Thank you for your comments