சாலை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து கணேஷ் கார்ஸ் நிறுவனம் அடாவடி!
வேலூர், அக்.26-
வேலூரில் சாலை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண் டு பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறு செய்து வருகிறது கணேஷ் கார்ஸ் நிறுவனம். இதற்கு ஒரு நிரந்தர தீர்வை வேலூர் போக்குவரத்து பிரிவு போலீஸாரும், வேலூர் மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
வேலூர் மாநகரின் மையப் பகுதியாக விளங்கும் கிரீன் சர்க்கிள் அருகில் கணேஷ் கார்ஸ் நிறுவனம் தனது புதிய கார்கள் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷனை வைத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த கார்கள் எதுவும் ஷோரூம் எல்லைப்பகுதியில் நிறுத்தப்படுவது இல்லை. மாறாக அந்த கார்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேலூரில் போக்குவரத்துக்கு நிரந்தர தடை ஏற்படுத்தும் நிறுவனங்களில் கணேஷ் கார்ஸ் நிறுவனமும் ஒன்று என்று தெரியவந்துள்ளது. ஒரு ஷோரூம் தொடங்குவதற்கு முன்னர் பார்க்கிங் இடம் எதுவென்று தீர்மானித்து முடிவு செய்வதில்லை. அத்துடன் தரை தளத்தில் பார்க்கிங் இடம் ஒதுக்க வேண்டும். ஆனால் அப்படியும் செய்யாமல் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இதனால் சுலபமாக வேலை முடிந்து விடுகிறது.
போக்குவரத்து பிரிவு போலீஸாருக்கும், வேலூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் ஒரு கணிசமான தொகையை வழங்கி விட்டு ஹாயாக இருக்கின்றனராம்.... இதுபோன்ற கட்டடங்கள்தான் வேலூரில் அதிகம் செயல்படுகின்றன. இதற்கெல்லாம் மாநகராட்சி நிர்வாகம்தான் அடித்தளமாக அமைகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடையில்லா சான்றிதழ் அளித்து விடுகிறது. அதை இதுபோன்ற பெரு நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன.
இதுபோன்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையா£ளர்கள் கொண்டு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் எப்படி போனால் எங்களுக்கென்ன என்ற ரீதியில் இதுபோன்ற நிறுவனங்கள் தங்கள் வசதியை மட்டுமே பார்க்கின்றன. அதாவது பொதுநலம் குறைந்து சுயநலத்தை மட்டுமே பார்க்கின்றன.
இந்த வழியாகத்தான் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு உயர் அலுவலர்கள் செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் என்று சொல்லி கொண்டே போகலாம். ஒருவர் கண்களில் கூட இதுபோன்ற செயல்கள் இதுநாள் வரையில் படவேயில்லை போலும். அவர்களும் நமக்கென்ன யார் எக்கேடு கெட்டால் என்னவென்ற ரீதியில் செயல்படுகின்றனர்களா என்ற கேள்வி பொதுமக்கள் தரப்பில் எழுந்துள்ளது.
இதுபோன்ற அட்டகாசங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதை அப்புறப்படுத்துவோர் யாரும் இல்லை... போக்குவரத்து பிரிவு போலீஸாரும் தங்கள் பங்குக்கு அந்த நிறுவனத்துக்கு சென்று கார்களை உள்ளே நிறுத்த அறிவுறுத்தலாம். ஆனால் அவர்கள் செல்வதும் இல்லை.... சொல்லுவதும் இல்லை... மாநகராட்சி அலுவலர்களும் எதைப்பற்றியும் கண்டுகொள்வது இல்லை... அவர்களுக்கு “ப” வைட்டமின் வந்தால் போதும், வாங்கி தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டு நடையை கட்டி விடுகின்றனர். இப்படியே சுயலாபத்தை மட்டுமே பார்க்கின்றனரே தவிர யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற ரீதியில் செயல்படுகின்றனர்.
சாலை ஓரத்தில் உள்ள கால்வாய் மீதூள்ள சிலாப்புகள் மீது வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அந்த சிலாப்புகள் ஆங்காங்கே உடைந்துகிடக்கின்றன. இவர்கள் சுய நலத்துக்காக பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துகின்றனர்.
சிலாப்புகள் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய ஓட்டைகளும் ஏற்பட்டுள்ளன. சாலை ஓரத்தில் உள்ள கால்வாய் மீது மூடப்பட்டிருக்கும் சிலாப்புகள் மீதுதான் பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இதுபோன்ற நிறுவனங்கள் அந்த கால்வாய் மீது மூடப்பட்டிருக்கும் சிலாப்புகள் மீது வாகனம் நிறுத்துவதால் நடைபாதையாளர்கள் சாலைகளின் ஒரங்களில் செல்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
கிரின் சர்கிள் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சர்வீஸ் சாலை இருபுறமும் ஆக்கிரமித்து வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிலாப்புகள் உடைந்து ஆங்காங்கே பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் அதன் உள்ளே விழும் ஆபத்தும் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று, சென்னை சில்க்ஸ் முன்பும் சாலை ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. விபத்து அபாயமும் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கன்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்தவே அச்சம் தெரிவிக்கின்றனர்.
பொதுசொத்துக்கு பங்கம் ஏற்படுத்துவர்கள் மீது முறையான எடுவடிக்கை எடுக்கவேண்டும்... மக்களின் வரிபணத்தை வீணாக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை உணரவேண்டும்.
இந்த நிலை மாறுவது எப்போது என்பதே கேள்விக்குறியாக உள்ளது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள்... அதுபோன்று திருடர்கள் திருந்தவே மாட்டார்கள். போலீஸார் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்ற ரீதியில் நிலைமை உள்ளது.
என்றைக்காவது ஒரு நாள் இதற்கெல்லாம் பதில் சொல்லும் நிலைமை விரைவில் வரும். அப்போது இதுபோன்ற சமூகவிரோதிகள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்போர் சிக்கி சின்னாபின்னமாவார்கள். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.
இதுபோன்று மாநகர எல்லைக்குள் உள்ள ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அந்த வாகனங்களை அப்புறப்படுத்திட வழிவகை செய்ய போக்குவரத்து காவல் துறை, மாநகராட்சி நிர்வாகம் அந்தந்த மண்டலங்களை சேர்ந்த உதவி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே பொதுமக்கள் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசு அலுவலர்கள் தனி நபர்களுக்கு கை கட்டி வாய் பொத்தி சேவகம் செய்கின்ற இழிநிலைதான் சமூகத்தில் தற்போதும் நிலவுகிறது. இந்தநிலை மாறினாலே போதும். அனைத்தும் நல்ல நிலைக்கு மாறிவிடும். நாட்டின் ஸ்திரத்தன்மையும் உயரும்... அதுவரை பொறுத்திருப்போமாக!.
மழைக்காலம் என்பதால் பாதசாரிகள் கால்வாய் சிலாப்புகள் மீது நடந்து செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும், வாகன நிறுத்தும் இடமாக அல்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானதாக மாற்றவேண்டும் என்றும் உடைந்த சிலாப்புகளை சரி செய்யவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கம்போல் அசம்பாவிதம் நடந்தபின் நடவடிக்கை எடுப்பார்களா...? அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்களா...? நமது அரசு அதிகாரிகள் என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்..
No comments
Thank you for your comments