Breaking News

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்

நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், சாந்தனு, மனோபாலா, பிரியா ஆனந்த், தனஞ்செயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கையில், 

‘மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனும் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. இவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு.

திரை நட்சத்திரமாக இருந்தபோதிலும் ஒரு தாழ்மையான மனிதராகவே இருந்தார். தலைவர் கலைஞரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறுவதற்காக எங்கள் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற புனித் அவர்களின் அன்பான செயல் இன்னும் என் இதயத்தில் உள்ளது.

கன்னட திரையுலகம் மிகச்சிறந்த மனிதரை இழந்துவிட்டது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் புனித் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.


No comments

Thank you for your comments