பான்மசாலா - குட்கா புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் - ர்மபுரி நகர வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி, அக்.1-
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று தர்மபுரி நகர வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி நகர வர்த்தகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் தர்மபுரி வர்த்தகர் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் எம்.கே.எஸ். உத்தண்டி தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன், பொருளாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் வர்த்தகர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தர்மபுரி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் 75 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது. யாரும் விற்பனையும் செய்யக்கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை கண்டிப்பாக கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம். தமிழக அரசின் பல்வேறு உதவிகளை பெறும் வகையில் வணிகர் நல வாரியத்தில் அனைவரும் உறுப்பினராக சேர வேண்டும்.
தடை செய்ய வேண்டும்
தர்மபுரி நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி வருவதால் அதன் ஒளியில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே தர்மபுரி நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எல்.இ.டி. விளக்கு பொருத்துவதை தடை செய்து விபத்துக்கள் ஏற்படாத வகையில் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் தங்கவேல், சங்க துணை செயலாளர் இளங்கோ, செயற்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், ரமேஷ்பாபு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
Click here 👉 வரலாற்று நினைவலைகள்... சுவாரஸ்யம்...

No comments
Thank you for your comments