Breaking News

குளத்தில் ஏ.டி.எம்., கார்டுகள்-திருத்தணி அருகே பரபரப்பு!

திருத்தணி, மார்ச் 2-

தனியார் கூரியர் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., கார்டுகள், வினியோகம் செய்யப்படாமல், குளத்தில் வீசப்பட்ட சம்பவம், திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்தூர் - புச்சிரெட்டிப்பள்ளி சாலையோரம் உள்ளது, சின்னப்பரெட்டி குளம். உமாபதி(50), என்பவர், குளக்கரை பக்கம் சென்ற போது, குளத்திலும், கரையிலும், இந்தியன் வங்கியின், 700க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., கார்டுகள் வீசப்பட்டிருந்ததை கண்டார். உடன் அவர், திருத்தணி போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.வங்கியில் இருந்து வாடிக்கையாளர் களுக்கு, தனியார் கூரியர் வாயிலாக அனுப்பிய ஏ.டி.எம்., கார்டுகள், பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி பகுதிகளில் வினியோகம் செய்யப்படாமல், குளத்தில் வீசப்பட்டது தெரிய வந்தது. அந்த ஏ.டி.எம்., கார்டுகள் எல்லாம்,2024டிசம்பர் வரை செல்லத்தக்கவை.

இதுபற்றி, பொதட்டூர்பேட்டை இந்தியன் வங்கி ஊழியர்களுக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர். வங்கி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, குளத்தில் வீசப்பட்டிருந்த, 700 ஏ.டி.எம்., கார்டுகளை மீட்டனர். இதுகுறித்து, தனியார் கூரியர் நிறுவன முகவர் கூறியதாவது:கடந்தாண்டு நவம்பரில் இருந்து, நான் திருத்தணி பகுதியில், கூரியர் சர்வீஸ் நடத்தி வருகிறேன். குளத்தில் வீசப்பட்ட ஏ.டி.எம்., கார்டுகள், 2018ல் அனுப்பப்பட்டவை. தற்போது, ஏ.டி.எம்., கார்டுகள், எங்கள் கூரியர் வாயிலாக வருவதில்லை.இந்த நிறுவனத்தில், ஏற்கனவே பணிபுரிந்த சில ஊழியர்களை, வேலையை விட்டு நீக்கியதால், கூரியர் மீது அவப்பெயர் வருவதற்காக, வேண்டுமென்றே இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம்.

இந்தியன் வங்கி மேலாளர் என்னை தொடர்பு கொண்டு, மீட்ட ஏ.டி.எம்., கார்டுகளை சம்பந்தப் பட்ட வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என, கேட்டுள்ளார். வினியோகம் செய்வதாக கூறியுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார். திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூறுகையில், குளக்கரையில் வீசப்பட்ட வங்கி ஏ.டி.எம்., கார்டுகள் தொடர்பாக, இதுவரை வங்கியிலிருந்து எங்களுக்கு எவ்வித புகாரும் வரவில்லை. புகார் கொடுத்தால் வழக்கு பதிந்து, வீசிய நபர்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என்றார்.இந்த சம்பவம், திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments

Thank you for your comments