முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்... மீறினால் அபராதம்-தேர்தல் ஆணையம்
ஈரோடு, மார்ச் 4 -
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நலன் கருதி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அனைத்து வேட்பாளர்களுக்கிடையே பாதுகாப்பினை உறுதி செய்திடவும் பல்வேறு அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், காய்கறி அங்காடிகள், மளிகை பொருட்கள் அங்காடிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
எனவே, மேற்கண்ட நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருத்தல் அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments