Breaking News

பெண் அமைச்சருக்கு ‘சீட்’ கிடைக்குமா?

வாணியம்பாடி, மார்ச் 2- 

வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட அமைச்சராக உள்ள நிலோபர் கபிலுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் எழுந்துள்ளது.



 இஸ்லாமியர், வன்னியர்கள் நிறைந்த வாணியம்பாடி தொகுதியில் கடந்த 2011 தேர்தலில், தி.மு.க.,வின் அப்துல்பாசில், 62 ஆயிரத்து, 338 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வின் முகமது அலி, 46 ஆயிரத்து, 653 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2016ல், 69 ஆயிரத்து 588 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் நிலோபர் கபில் அமைச்சரானார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் சையத் பாரூக், 55 ஆயிரத்து 62 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். த.மா.கா.,வின் ஞானசேகரன், 21 ஆயிரத்து 90, பா.ம.க.,வின் கிருபாகரன், 10 ஆயிரத்து, 117 ஓட்டுக்கள் பெற்றனர். தற்போது, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, அமைச்சர் நிலோபர் கபில் முயல்கிறார். ஆனால், அவர் மீதான அதிருப்தியால் அவருக்கு, ‘சீட்’ கொடுக்க கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால், அ.தி.மு.க.,வில் மாஜி எம்.எல்.ஏ., சம்பத்குமார் உள்ளிட்ட 67 பேர் முயல்வதால் யாருக்கு, ‘சீட்’ கொடுப்பது என அ.தி.மு.க., மேலிடம் திணறுகிறது. தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் தேவராஜ், தி.மு.க., கூட்டணியின் இந்தியன் முஸ்லிம் லீக் அப்துல் பாசித் ஆகியோர் ‘சீட்’ பெற முயல்கின்றனர். எது எப்படியோ போகட்டும் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது தனது உண்மை முகத்தை வெளிக்காண்பித்து அவரது மனதில் நீங்கா இடம் பிடித்து சீட்டும் பெற்றார் நிலோபர் கபில். இப்படி நடிப்பவர்களை நம்பி சீட் கொடுத்து ஏமாந்து போனவர்தான் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா. ஆனால் இப்போதுள்ள சூழலில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இரட்டையர்கள் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர் அதிமுகவில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள். நிலோபர் கபில் அமைச்சராக இருந்தார். ஆனால் தொகுதி வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாடு அதிகம் தொகுதி மக்களிடம் உள்ளது. அத்துடன் சொந்த கட்சிக்காரர்களிடமும் இவர் மீது கடும் அதிருப்தியே நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாணியம்பாடி தொகுதியை மீண்டும் நிலோபர் கபிலுக்கு கொடுத்தால் அவரால் தொகுதியை கைபற்ற முடியாது,அது கை நழுவி மாற்றுக் கட்சிக்கு செல்ல அதிகம் வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும். இனி அதிமுக தலைமைதான் இந்த விபரீத விளையாட்டை கையில் எடுக்க வேண்டும்.

No comments

Thank you for your comments