அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ரேஷன் கடையில் முறைகேடு!
திருவள்ளூர், பிப்.16-
திருவள்ளூர் மாவட்டம், அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ரேஷன் கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த குறைபாடுகளை களையத்தான் யாரும் இல்லாத நிலை நிலவி வருகிறது.
அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றும் பரந்தாமன் என்பவர் பல ஆண்டுகளாக இங்கேயே பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து இங்கு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றை பொதுமக்களுக்கு அளவு குறைவாகவே வழங்கிவிட்டு அரசு வழங்கும் விலையை விட கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ரேஷன் கடையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு அவர்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களையும் மலிவு விலையில் வழங்கி ஏழை, எளிய மக்கள் அன்றாட உணவு அருந்த வேண்டும் என்பதற்காக அரசு இவர்களுக்கு இதனை செய்து வருகிறது. ஆனால் ரேஷன் அங்காடியில் பணிபுரியும் ஆட்கள் இந்த பொருட்களையும் கொள்ளையடித்து விற்பனை செய்து பொதுமக்கள் வயிற்றில் அடித்து விட்டு குளிர் காய்கின்றனர்.
சிலர் தங்கள் கைபேசியில் வரும் செய்தியை வைத்து என்னிடத்தில் 150 ரூபாய் வாங்கினாய், ஆனால் இங்கு என்னுடைய அலைபேசியில் 110 ரூபாய்தான் வந்துள்ளது என்று கேட்டால், அதற்கு சாமர்த்தியமாக சிரித்தபடியே மக்களை குழப்பி பல்வேறு விளக்கங்களை கூறி வெளியே அனுப்பிவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு 10 கிலோ, 15 கிலோ இலவசமாக போடப்படும் கோதுமை, அரிசி போன்றவற்றை இருப்பு இல்லை என்று கூறி 5 கிலோ 7 கிலோ வழங்கிவிட்டு, பின்பு 10 கிலோ, 15 கிலோவாக கணக்கு காண்பித்து ஏமாற்றும் வேலையை மிகச் சாதுர்யமாக செய்து வருகிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஏமாற்றி கொள்ளையடிக்கும் ஏழை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசியை வெளியில் உள்ள தனியார் அரிசி கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
ஏழை மக்களின் ஜீவாதாரத்தை கொள்ளையடிக்கும் பரந்தாமன் மீது துறை ரீதியாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், இவரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவரை எதிர்த்து கேள்வி கேட்கும் பொதுமக்களிடம், தான்தோன்றித்தனமாக பதில் அளிப்பது மட்டுமில்லமால், என்னை பணியிட மாற்றம் செய்ய முடியாது என்று ஆணவமாகவும், தெனாவெட்டாகவும் கூறி வருகிறார். மேலும், இவர் வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை வட்டாட்சியர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு வாரந்தோறும் ஒரு கணிசமான தொகையை கொடுத்து வருவதாகவும், அதனால் தன்னை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்றும், என் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் கொக்கரித்து வருகிறாராம் பரந்தாமன். பரந்தாமனுக்கு ஸ்தோத்திரம். இவரது பேச்சு மக்களை அச்சமடைய வைத்துள்ளது என்று பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் குமுறுகின்றனர். இவர் கூறிவருவது போல் உயர் அதிகாரிகளுக்கு மாமூல் செல்கிறதா...? இல்லையா...? என்பது இவர் மீது எடுக்கபடும் நடவடிக்கையை பொறுத்தே உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் அப்பகுதி அப்பாவி மக்கள். இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை காலச்சக்கரம் கண்ணாடியே காட்டும்... பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments
Thank you for your comments