Breaking News

கோவர்த்தன மலை கற்களை விற்க முயன்ற சென்னையைச் சேர்ந்த நபரை கைது செய்த உ.பி. காவல்துறை

 சென்னை, பிப்.16-

கோவர்த்தன மலை கற்களை ஆன்லைன் மூலம் விற்க முயற்சி செய்ததாக சென்னையைச் சேர்ந்த நபரை உத்தரப்பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.



உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரத்தில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவர்த்தன மலை. இந்த மலையை இந்துக் கடவுள் கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் தூக்கி மதுரா மக்களை காப்பாற்றியதாக ஒரு நம்பிக்கை உண்டு. இந்த நிலையில் புனிதமான கோவர்த்தன மலை கற்களை வீட்டில் வைத்தால் நன்மை நடக்கும் என கூறி அந்த கற்களை ஆன்லைன் விற்பனை இணைய தளத்தில் (இந்தியா மார்ட்) 5,175 ரூபாய் விலைக்கு விளம்பரம் செய்து விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரைச்சேர்ந்த சமூக ஆர்வலர் கேஷவ் முக்யா என்பவர் கோவர்தன காவல் நிலையத்தில் அது தொடர்பாக புகார் அளித்தார். அதில், ‘‘இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும், மத நம்பிக்கையை வணிகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விற்பனைக்கு விளம்பரம் செய்த இணைய தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினர் உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டங்கள் நடத்தினர். அதனையடுத்து ‘இந்தியா மார்ட்’ என்கிற பொருட்கள் விற்பனை செய்யும் இணையதளத்தின் உரிமையாளர் தினேஷ் அகர்வால் பிரிஜேஷ் அகர்வால், அங்கூர் அகர்வால் ஆகிய 3 பேர் மீது 2 பிரிவுகளில் கோவர்தன காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியா மார்ட் நிறுவனத்தின் சார்பில் காவல்துறையில் அளித்த விளக்கத்தில் பொருட்களை விற்கவும், வாங்கவும் முயற்சி செய்பவர்களுக்கு பாலமாக மட்டுமே இணையதளம் செயல்படும் எனவும் நேரடி விற்பனையில் இணையதளம் ஈடுபடாது என்பதால் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளனர். மேலும் தங்களது இணையதளத்தில் கற்கள் விற்கப்படுவதாக விளம்பரம் செய்திருந்த நபர் தொடர்பான விவரங்களையும் காவல்நிலையத்தில் அளித்துள்ளனர்.

அந்த விவரங்களை உத்தரப்பிரதேச மாநில சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்த போது அவர்கள் சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பதும், இவர் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று சென்னை வந்த உத்தரப்பிரதேச போலீசார் அசோக்நகர் போலீசார் உதவியுடன் பிரேம்குமாரை கைது செய்து உத்தரப்பிரதேசம் அழைத்துச் சென்றனர்.

No comments

Thank you for your comments