Breaking News

பெண் விஏஓவுக்கு காப்பு!

திருவள்ளூர், பிப்.26-

ஆவடி அருகே பட்டாவுக்கு பரிந்துரை செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.



ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். சமீபத்தில் இவர், தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆவடி அருகே பாலவேடு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரைக்க கோரி, கிராம நிர்வாக அலுவலர் துர்காதேவியிடம், சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், அவர் பட்டாவுக்கு பரிந்துரை செய்ய ரூ.2ஆயிரம் லஞ்சம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.

இதனை கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவிடம் புகார் கொடுத்தார். இதனை அடுத்து, டி.எஸ்.பி., குமரகுரு அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.ஆயிரம் பணத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்துள்ளனர். 

மேலும், அதனை துர்காதேவியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, சதீஷ்குமார் பாலவேடு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர், அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியிடம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., குமரகுரு தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் துர்காதேவியை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments