Breaking News

நோட்டாவுக்கு வாக்களிக்க காத்திருக்கும் தி.நகர் பகுதி மக்கள்

சென்னை, ஏப்.21-
ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியால் நோட்டாவுக்கு வாக்களிக்க காத்திருக்கும் தி.நகர் பகுதி மக்கள்.

சென்னை தியாகராயநகர் பகுதி மக்களுக்காக, அப்பகுதியில்  தியாகராயநகர் குடியிருப்போர் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். குடியிருப்பு பகுதியாக இருந்த தி.நகர், தற்போது பெரும் வணிக வளாகங்கள், துணிக் கடைகள், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் என நெருக்கடி
நிறைந்த சந்தை பகுதியாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர்கள் கவலை தெரிவத்துள்ளனர்.

பெரும் வணிகர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு மற்றும் பிரதிநிதிகளை புறக்கணிக்கும் வகையில், ரங்கன் தெரு, மோதிலால் தெரு, காந்தி தெருக்களில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும், “தியாகராயநகர் குடியிருப்புவாசிகள் நலச்சங்க” உறுப்பினர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க போவதாக விளம்பர அட்டைகளை வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் சுமார் 12ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு விழும் என்கிறார் தியாகராயநகர் குடியிருப்புவாசிகள் நலச்சங்க செயலாளர் கண்ணன்.

நோட்டாவுக்கு வாக்களிப்பதன் மூலம் தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்ளலாமே தவிர, இதில் மாற்றம் ஏதும் விளையப்போவதில்லை என்கின்றனர்  அரசியல்  நோக்கர்கள். அதே நேரத்தில், வீணாகும் வாக்குகளை புதிய வேட்பாளர்களுக்கு அளிக்கும் பட்சத்தில், தொகுதிகளில் மாற்றம் கொண்டுர முயற்சிக்கலாம் என்று கூறுகின்றனர்.

No comments

Thank you for your comments