கருப்பண்ணசாமியிடம் உத்தரவு வாங்கி மதுரை வந்தார் கள்ளழகர் - நாளை வைகையில் இறங்குகிறார்
மதுரை, ஏப்.21-
அழகர்மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கள்ளழகர் ஆண்டு தோறும்
சித்ரா பெளர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு
சாபவிமோசனம் அளிப்பார். இத்திருவிழா புராணகாலந்தொட்டே நடந்துவருகிறது.
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்
வைபவம் நாளை வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த 7ம் தேதி அமாவாசையன்று
இந்த கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை முதல் விழா தொடங்கி பெருமாள்
தோளுக்கினியான் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை
பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்று மாலை பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள
மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சியளித்தார்.
கண்டாங்கி பட்டு
புதன்கிழமையன்று மாலை கள்ளழகர் கோவிலிருந்து புறப்பாடாகி கொண்டப்பநாயக்கர்
மண்டபத்தில் எழுந்தருளினார் அழகர். அங்கு கண்டாங்கி பட்டு உடுத்தி,
கரங்களில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் அலங்காரமாகி,
தங்கப்பல்லக்கில் புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பதினெட்டாம்படி
கருப்பணசாமி கோவில் முன்பு வந்தார்.
கருப்பண்ணசாமியிடம் உத்தரவு
அங்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று, மேளதாளம் முழங்க தீவட்டி
பரிவாரங்களுடன் ‘போய் வருகிறேன், போய் வருகிறேன்' என்று கருப்பணசாமியிடம்
உத்தரவு வாங்கி செல்லும் பக்தி பரவச நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின்பு
கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார்.
எதிர்சேவை
கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, உள்ளிட்ட பல்வேறு மண்டபங்களில் கள்ளர்
திருக்கோலத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார்.
இன்று அதிகாலையில் மதுரைக்கு வந்த அழகரை புதூர் மூன்றுமாவடி பகுதிகளில்
குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும்
எதிர்சேவை நடைபெற்றது.
தல்லாக்குளம் பெருமாள்
கோவில்
இன்றிரவு 9.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தல்லாகுளம் வெங்கடாஜலபதி பெருமாள்
கோவிலில் சுந்தரராஜபெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துபடி
நடக்கிறது. பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள்
நாச்சியாரின் திருமாலையை சாத்தி, பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நிகழ்ச்சி
நடைபெறுகிறது.
வைகையில் எழுந்தருளல்
வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளல்
நடைபெற்று, அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தங்கக்குதிரை
வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். அதனை லட்சக்கணக்கான
பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
மதுரையில் விழாக்கோலம்
மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என கடந்த இரு தினங்களாகவே மதுரையில்
பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆற்றில் இறங்குவதற்காக அழகரும் மதுரைக்கு
வந்துள்ளதால் இன்று முதல் அழகரைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மதுரையை
நோக்கி படையெடுத்து வரத்தொடங்கியுள்ளனர். இதனால் தூங்கா நகரம் பக்தர்கள்
வெள்ளத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
No comments
Thank you for your comments