Breaking News

அதிமுக கூட்டத்தில் தர்மபுரியில் திடீர் கலாட்டா அமைச்சர் பழனியப்பன் தலைதெறிக்க ஓட்டம்!

தர்மபுரி, ஏப்.12-
தர்மபுரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் கடந்த 10ம் தேதி தர்மபுரி டவுன் வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்தது. அமைச்சர் பழனியப்பன், மாவட்ட செயலாளரும், பாலக்கோடு தொகுதி வேட்பாளருமான அன்பழகன், முன்னாள் அமைச்சர் முனுசாமி (பென்னாகரம் வேட்பாளர்), வேட்பாளர்கள் பு.தா.இளங்கோவன் (தர்மபுரி),
குப்புசாமி(பாப்பிரெட்டிபட்டி), முருகன்(அரூர்) ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் வருகை தரவில்லை. தர்மபுரி வேட்பாளர் பு.தா.இளங்கோவன் பேச எழுந்தபோது, வெளியூர்காரரை எப்படி இங்கு நிறுத்தலாம். எப்படி வெற்றி பெற முடியும் என சிலர் சத்தம் போட்டனர். இதையடுத்து உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பேசினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரியில் சிலர் அதிமுகவை தோற்கடித்தனர். அதுபோல் இந்த முறை யாரும் கவிழ்த்து விடாதீர்கள் என கூறினார்.

உடனே சிலர் கடந்த 5 ஆண்டுகளாக நீ யாரை மதித்தாய். அதிமுக தோல்விக்கு நீதான் காரணம், நீ எங்களுக்கு அறிவுரை சொல்லாமல் உட்கார் என ஒருமையில் கூறி கூச்சலிட்டனர். இதனால் கோபமடைந்த பழனியப்பன் ரவுடித்தனம் செய்ய இங்கு வந்துள்ளீர்களா, நான் எல்லாத்தையும் பார்த்துவிட்டு தான் வந்துள்ளேன். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என்றார். அப்போது ஒரு தரப்பினர் அமைச்சர் பழனியப்பனை ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனியப்பன், டி.ஆர்.அன்பழகன் (ஜெ.,பேரவை மாநில செயலாளராக இருந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்) சொல்லித்தான் இங்கு ரவுடித்தனம் செய்ய வந்துள்ளீர்களா என்றார். அப்போது மேடையின் முன்பகுதியில் இருந்த சிலர் சேர்களை எடுத்து மேடையில் வீசினர். அமைச்சரையும் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். 

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அமைச்சர் பழனியப்பன் சிக்கிக் கொண்டார். இதில் நிலை குலைந்த அமைச்சர் மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன், கே.பி.முனுசாமி ஆகியோர் தொண்டர்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பழனியப்பன் காரில் ஏற முடியாதபடி காரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்த கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் அமைச்சர் பழனியப்பன் தலை தப்பியது என்று தப்பியோட்டம் பிடித்தார். இந்த கூட்டம் பாதியில் நிறைவு பெற்றது..

No comments

Thank you for your comments