Breaking News

29 வயதில் முதலமைச்சராக பதவி வகித்து புதுச்சேரியில் சாதனை படைத்தவர் எம்ஓஎச்!

புதுச்சேரி, ஏப். 04-
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியும் ஒன்று. புதுச்சேரி தனது அரசியல் ரீதியான விடுதலைக்காக மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதானமாக எழுப்பி வருகிறது. இதுஒருபுறம் இருக்க எந்த மாநிலத்தாலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை புதுச்சேரி தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் எம்ஓஎச். பாரூக் ஹூசைன் என்ற பெயர் தவிர்க்க முடியாதது.

 புதுச்சேரியின் ஒரு பகுதியான காரைக்காலில் பிறந்த பாரூக் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ்
கட்சியில் இருந்து தொடங்கினார். 27 வயதினிலே சட்டசபைக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் வெங்கடசுப்பா ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவையில் முதன்முதலாக சபாநாயகர் பதவியை அலங்கரித்தார். காங்கிரஸ் கட்சி பாரூக்கை முதன் முதலாக முதல்வராக ஆட்சி கட்டிலில் அமர்த்தியது. அப்போது இவருக்கு வயது 29தான். 

1969ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடித்த பாரூக் மீண்டும் முதல்வரானார். அவசர நிலை காலக்கட்டத்தில் மீண்டும் காங்கிரசில் இணைந்த பாரூக், 1977ம் ஆண்டு புதுவை இணைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய பங்காற்றினார். 1985ல் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைத்த போது மூன்றாவது முறையாக முதல்வரானார். 1991ம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் இணையமைச்சரானார். சிறந்த நிர்வாகி, ராஜதந்திரி என்றெல்லாம் எம்ஓஎச் பாரூக் பெயர் எடுத்திருக்கிறார். என்றாலும் காரைக்காலில் தனது சகாவாக இருந்த சண்முகத்துடன் இவர் நடத்திய அரசியல் போட்டிகள் அவ்வப்போதும், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை எம்பி, சௌதி அரேபியாவுக்கான இந்திய து£தர், ஜார்கண்ட், கேரள மாநில ஆளுநர் என பல்வேறு பதவிகள் இவரை தேடி வந்தது. இப்போது அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், சௌத்ரி பிரகாம் பிரகாஷ், அர்ஜூன் முண்டா, கேஜ்ரிவால் ஆகியோர் இளம் வயதில் முதலமைச்சராக உருவாகியுள்ளனர். என்றாலும் 29 வயதில் முதல்வராக முடிசூடியவர் பாரூக். இவரது சாதனையை இதுநாள் வரை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments