அனலால் தகிக்கும் தமிழகம்: வேலூர், திருச்சியில் 107 டிகிரி வெப்பம் பதிவு
சென்னை, ஏப்.15-
பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசுகிறது.
தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் நீர்
நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் தண்ணீர் பெருகியது. அந்த மகிழ்ச்சி சில
மாதங்கள் கூட நீடிக்கவில்லை. பிப்ரவரியிலேயே வெப்பம் தகிக்கத்
தொடங்கிவிட்டது.
வட மாவட்டங்களான சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை,
சேலம், ஆகிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான திருச்சி, கரூர்,
பெரம்பலூர் போன்ற மத்திய மாவட்டங்களிலும் கோடையின் தொடக்கத்திலேயே வெயில்
வறுத்தெடுக்க தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் கடுமையாக வெயில் வாட்டி வருகிறது.
சதமடித்த வெயில்
மார்ச் மாதம் 23ம் தேதி திடீரென வெயில் தாக்கம் அதிகரித்து 106 டிகிரி
வெயில் சுட்டெரித்தது. அதைத்தொடர்ந்து 3 நாட்கள் வெயில் குறைய தொடங்கியது.
இதையடுத்து கடந்த 10ம் தேதி 102 டிகிரியும், 11ம் தேதி 103 டிகிரியும்,
வெயில் கொளுத்தியது.
லேசான மழை
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெப்பத்தின் தாக்கம்
குறைந்து ஓரிரு மாவட்டங்களில் மழை பதிவாகியது. அதைத் தொடர்ந்து, மீண்டும்
வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அனல் காற்றும் வீசி
வருகிறது.
107 டிகிரி வெப்பம்
புதன்கிழமையன்று 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.
தமிழகத்திலேயே அதிக பட்சமாக வேலூர், திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட்
வெயில் பதிவாகி உள்ளது. சுட்டெரித்த வெயிலால் நேற்று மக்கள் பெரிதும்
அவதிப்பட்டனர். ரோட்டில் அனல் காற்று வீசியது.
மதுரையில் 105 டிகிரி
புதன்கிழமையன்று கரூர் பரமத்தி பகுதியில் 106 டிகிரி வெயில்
பதிவாகியுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, சேலம், பாளையங்கோட்டை, மதுரையில்
105 வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையில் 102 டிகிரி
சென்னை, நாகப்பட்டினத்தில் 102 டிகிரி வெயிலும், தொண்டி, கோவையில் 100
டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் நண்பகல் நேரத்தில்
வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்,
No comments
Thank you for your comments