நிருபர் டைரி: புற்றீசல் போல் திறக்கப்படும் மகளிர் தங்கும் விடுதிகள்!
வேலூர், மார்ச் 4-
வேலூர் மாவட்டத்தில் புற்றீசல் போல் திறக்கப்பட்டு வரும் மகளிர் தங்கும் விடுதிகளை ஆய்வு நடத்தவோ, அங்குள்ள அடிப்படை வசதிகளை பார்வையிடவோ எந்த அரசுத்துறை அதிகாரிகளும் வருவதில்லை. இதனால் மகளிர் தங்கும் விடுதிகள் சிறை போல மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புற்றீசல் போல் மகளிர் தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக வேலூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியாக வரும் இடத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கி உள்ளன.
அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதிகள்
இந்நிலையில் பள்ளிகள், கல்லு£ரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அருகில் இந்த மகளிர் தங்கும் விடுதிகள் ஆங்காங்கே அனுமதியின்றி முளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால், அதிகளவில் தங்கும் விடுதிகள் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்படுகின்றன. இதை ஆய்வு செய்ய வேண்டிய தொடர்புடைய அரசு அதிகாரிகள் ÔபÕ வைட்டமின் பெற்றுக் கொண்டு கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுகின்றனர்.
தங்கும் விடுதிகளை நடத்துவோர் அவர்கள் விருப்பம்போல விடுதிகளை நடத்தி வருகின்றனர். இதில் தங்குவோர் குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்ட பறவைகள் போல இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு விடுதிகள் மற்றும் பெண்கள் விடுதிகள் நடத்த முறையாக பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார். வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குழந்தைகள் இல்லங்களும், இளைஞர் நீதி திருத்தப்பட்ட சட்டம் 2006 பிரிவு 34&ல் குழந்தைகள் இல்லங்களும் பதிவு செய்யப்பட்டு இயங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
எனவே, வேலூர் மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்கள் அனைத்தும் உரிய ஆவணங்களோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி தங்கள் இல்லங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
விதிமுறைகள்
மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லங்கள், பள்ளி சார்ந்த விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக தமிழக அரசின் தமிழ்நாடு பெண்கள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 சட்டத்தின்கீழ் பதிவு செய்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 1–ல் கலெக்டர் பெயரில் ரூ.3 ஆயிரத்துக்கான வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ இணைத்து வழங்க வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் அதற்கான நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழுவினர் விடுதி மற்றும் இல்லங்களை ஆய்வு செய்வார்கள். அதாவது இருபாலர் தங்கி இருக்கும் இல்லங்களில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே இடவசதி, கழிப்பறை, 50 நபர்களுக்கு மேலாக தங்கி இருந்தால் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்க வேண்டும். 24 மணி நேர பாதுகாவலர்கள் போன்ற விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
சிறை தண்டனை
எனவே, விதிகளை மீறி பதிவு செய்யாமல் விடுதி மற்றும் இல்லத்தை நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பதிவு செய்ய தேவையான விண்ணப்ப படிவங்கள் பெறவும், சட்டவிதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
காற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு!
கலெக்டர் உத்தரவு பிறப்பித்தும் அதன் மீது ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் யாரும் இந்த உத்தரவை அமல்படுத்தியதாகவும், நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுத்ததாகவோ தகவல்கள் ஏதும் இல்லை. 3 மாதங்கள் கடந்த நிலையில் ஆங்காங்கே பதிவு செய்யாமல் மகளிர் விடுதிகள் தொடர்ந்து அவரவர் விருப்பம்போல இயக்கி வரும் சூழல்தான் நிலவுகிறது. இதுநாள் வரை எந்த விடுதி மீதும் நடவடிக்கை எடுத்ததாக மாவட்டத்தில் தகவல்கள் வெளியாகவில்லை. கலெக்டர் உத்தரவோ காற்றிலே பறக்குது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இனியாவது உரிய தணிக்கை செய்து நடவடிக்கை எடுத்து அங்கீகாரம் பெறாத விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். அதுமட்டுமல்லாமல் பெண்கள் விடுதி என்ற பெயரில் தவறான செயல்களும் அரங்கேறிவருகிறது. இதனால் அதில் தங்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. அதுமட்டுமில்லாமல் ஒருநபருக்கு குறைந்தது 40அடி இடம் ஒதுக்கப்படவேண்டும். ஆனால் அவ்வாறு பெண்கள் விடுதிகள் செயல்படவில்லை. ரயில் பெட்டியில் படுத்து உறங்குவது போல் தான் நிலைமை உள்ளது. இதனால் பெண்களுக்கு அசௌகரியம் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் தவறி விழுந்தால் ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
இதுபோன்று பாதுகாப்பற்ற அரசு விதிமுறைகளை மீறி அனுமதியின்றி நடைபெறும் விடுதிகளை விரைவில் அடையாளம் காண்போம்.
No comments
Thank you for your comments