Breaking News

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 11-
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருடகள் வழங்கக்கூடாது என திருவண்ணாமலையில் நடந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஆர்.உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசும்போது, “தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கக்கூடாது. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. வாக்களிக்க வரும் வாக்காளர்களை மிரட்டக்கூடாது.


நகராட்சி பகுதியில் தேர்தல் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் பொது இடத்தில் விளம்பரம் செய்யக்கூடாது. தனிநபர்களின் சுவர்கள் மற்றும் வீடுகளில், அதன் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று விளம்பரங்களை வைக்கலாம்.

பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்
கூடாது. மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள்
அமைந்துள்ள பகுதியில் பிரச்சாரம் செய்வதையும் மற்றும் பொதுக்கூட்டம்
நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு
பொருட்கள் வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவதும், பெறுவதும் சட்டப்படி
குற்றமாகும். இரண்டு தரப்புக்கும் தண்டனை கிடைக்கும். பணம் மற்றும் பரிசு
பொருட்கள் வழங்குவது குறித்து தெரியவந்தால் தேர்தல் அதிகாரிகள் மற்றும்
பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தேர்தலை 100 சதவீதம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து
கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைவரும் வாக்களிக்க
வேண்டும் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று
மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும்” என்றார். காவல் துணை கண் காணிப்பாளர் சரவணக்குமார், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஏ.சுப்ரமணி, தி.மலை வட்டாட்சியர் சி.பன்னீர்செல்வம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பி.செந்தமிழ்அரசு, அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி, திமுக வழக்கறிஞர்கள் ந.பழனி, அருண்குமரன், பாஜக சதீஷ்குமார், சிபிஐ தங்கராஜ், சிபிஎம் வீரபத்திரன், தேமுதிக காளிங்கன்,
பிஎஸ்பி எம்.ஆர்.பாஸ்கரன், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள்
பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments