பணம், மதுபாட்டில் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் தி.மலை கலெக்டர் ஞானசேகரன் பேச்சு
திருவண்ணாமலை, மார். 6: பணம், மதுபாட்டில் மற்றும் பரிசு பொருட்கள்
கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அ.ஞானசேகரன் கேட்டுக்கொண்டார். தேர்தல் பணிகள் குறித்து பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அ.ஞானசேகரன் தலைமை வகித்து பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் மற்றும் 3 நிலை கண்காணிப்புக் குழு என்று 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பணம்,
மதுபாட்டில் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய
வேண்டும்.
இலக்கு நிர்ணயித்து பணியாற்றக்கூடாது. பத்திரிக்கை மற்றும் மீடியாவில்
பிரபலமாக வேண்டும் என்பதற்காக தங்கம், பணம் மற்றும் மதுபாட்டில் பறிமுதல் செய்யக்கூடாது. மக்களுக்கு இன்னல்களை கொடுக்காமல் பணி செய்ய வேண்டும்.
50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் குறித்து விசாரணை அடிப்படையில்தான் பறிமுதல் செய்ய வேண்டும். உரிய ஆதாரம் இருந்தால் விடுவிக்க வேண்டும். பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்
குழுக்களுக்கு வேறு பணி ஒதுக்கக்கூடாது. உங்கள் பணிகள் குறித்த தினசரி
அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்பி, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
மக்களிடம் சோதனை நடத்தும்போது வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
வாக்களிக்க பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றம். இருவர் மீதும்
நடவடிக்கை எடுக்கலாம். எந்த தவறுகளுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. பெண் காவலர் மூலம் பெண்கள் மற்றும் அவர்களது உடமைகளை சோதனையிட வேண்டும். நேர்மையாக தேர்தல் நடத்த ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, செய்யாறு சார் ஆட்சியர் பிரபு சங்கர், திருவண்ணாமலை
கோட்டாட்சியர் உமாமகஸ்வரி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் வெங்கடேசன், கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments