Breaking News

தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: குஜராத்தில் குவிந்த தேசிய பாதுகாப்பு படை

Gujarat on high alert after intelligence input on infiltration of terrorists அகமதாபாத், மார்ச் 07: 
சிவராத்திரி அன்று தாக்குதல் நடத்த குஜராத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 10 பேர் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜான்ஜுவா தெரிவித்துள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அகமதாபாத் வந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 10 பேர் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜான்ஜுவா இந்திய பாதுபாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அஜீத் தோவல் குஜராத் மாநில போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தார்.

தீவிரவாதிகள் சிவராத்திரியான இன்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. குஜராத்திற்குள் புகுந்துள்ள தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சூழலில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதற்கிடையே கட்ச் மாவட்டத்தில் 3 படகுகள் கேட்பார் இன்றி இருந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். மூன்றாவது படகு கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படகில் இருந்தவர்கள் எல்லை பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படகை சோதனை செய்ததில் அதில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல்கள், லாட்ஜுகளில் யாராவது சந்தேகத்திற்கு இடமாக தங்கியுள்ளனரா என்றும் சோதனை நடந்து வருகிறது. இந்த சூழலில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அகமதாபாத் வந்து குவிந்துள்ளனர்.

No comments

Thank you for your comments