50 ஆண்டுகளாக அரசியல் பொதுக்கூட்டம், பிரசாரங்கள் இல்லாத அதிசய கிராமம்
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக கட்சி கொடிக்கம்பம், சுவர் விளம்பரம் இல்லாத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் தொடர்பான பொதுக்கூட்டம்,
பிரசாரங்கள் என எதுவும் இங்கு நடப்பது இல்லை. இந்த கிராமத்தில் கட்சி கொடிக்கம்பங்களும் இல்லை, சுவர்களில் பிரசார வாசகங்கள் எதுவும் எழுதப்படுவதும் இல்லை. சட்டமன்ற, பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது கூட இந்த கிராமத்தில் வாகன பிரசாரம் மட்டுமே நடக்கும்.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், தற்போதுதான்
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரங்கள் எழுதக்கூடாது
என்றும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்கள்
செய்யலாம் என்றும் கட்டுப்பாடுகள் வந்து உள்ளன.
ஆனால், எங்கள் கிராமம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன் கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கிராமப்பெரியவர்கள் ஒன்று கூடி
இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அந்த முடிவை நாங்கள் இதுவரை தொடந்து கடைபிடித்து வருகிறோம்.
எங்கள் ஊருக்குள் அரசியல் தொடர்பான கொடிக்கம்பங்கள் நட அனுமதியில்லை.
அதுபோன்று சுவர்களிலும் தேர்தல் பிரசார வாசகங்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலின்போது, நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, எங்களுக்குள் ஒரு பிரதிநிதியை தேர்வு செய்து வெற்றி பெறச்செய்வோம்.
இதனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்கள் கிராம மக்கள் எவ்வித கருத்து
வேறுபாடுகளும் இல்லாமல் அமைதியாக இருக்க முடிகிறது என தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments