Breaking News

வேலூர் பாலாற்றங்கரையில் வாலிபர் அடித்துக் கொலை - 3 பேர் போலீசில் சரண்

வேலூர், மார்ச்.15–
வேலூர் பாலாற்றங்கரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேலூர் விருதம்பட்டை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் (வயது 23), மகேஷ்குமார் (23), ராஜேஷ்குமார் (23)  ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். மகேஷ் குமாருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் அவரது நண்பர்களுக்கு நேற்று இரவு மது விருந்து அளித்தார்.  மது அருந்திய 3 பேரும் விருதம்பட்டு மைதானத்தில் நடந்த மயானக் கொள்ளை கச்சேரி பார்த்தனர். பின்னர் மீண்டும் மது குடிக்க மதுபாட்டில்களுடன் விருதம்பட்டு பாலாற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு உட்கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது சுமார் 20 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவருக்கும் மது ஊற்றி கொடுத்தனர். குடித்துக் கொண்டிருந்த போது திடீரென அந்த வாலிபருடன் வாய்த்தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், மகேஷ்குமார், ராஜேஷ்குமார் 3 பேரும் மதுபாட்டில் மற்றும் கல்லால் அந்த வாலிபரை தாக்கினர்.  தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு  வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

வாலிபர் இறந்ததும் 3 பேரும் பதட்டம் அடைந்தனர். பின்னர் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி சரணடைந்தனர்.

போலீசார் பாலாற்றங்கரைக்கு சென்று கொலையான வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் விருதம்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறிதது விருதம்பட்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? விருதம்பட்டு பாலாற்றங்கரைக்கு எப்படி வந்தார் என்பது தெரியவில்லை.  இறந்த வாலிபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விருதம்பட்டு இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தொ. எண் : 94981 89254



No comments

Thank you for your comments