மகாமகத் திருவிழாவிற்கு முதன் முறையாக வருகை தந்த நாக சாதுக்கள்
கும்பகோணம், பிப்.20:
இமயமலை, காசி, வாரணாசியில் வசிக்கும் நாக
சாதுக்கள், அகோரிகள், துறவிகள் வடஇந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின்போது,
திரளாக வந்து புனித நீராடி ஆசீர்வாதம் வழங்குவார்கள்.
கும்பமேளாவின் போது 48 நாட்களும் தவமிருக்கும் அவர்கள் யாகம் நடத்தி
அதில் கிடைக்கும் சாம்பலை தங்களது உடலில் இவர்கள் பூசிக்கொள்வது வழக்கம்.
தற்போது கும்பகோணத்தில் மாகமகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தாண்டு முதன்முறையாக துறவிகள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கும், மகாமகக் குளத்தில் புனித
நீராடுவதற்கும் நாடெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள்,
சாதுக்கள் வந்துள்ளனர்.
இதில், முதன்முறையாக இமயமலை, காசியிலிருந்து 15 நாக சாதுக்கள் வந்துள்ளனர்.
இவர்கள் கோவிந்தபுரம் பாண்டுரங்க ஆசிரமத்தின் அருகே புனித நதியான
காவிரியின் துணை ஆறான வீரசோழன் ஆற்றின் கரையோரத்தில் கூடாரம் அமைத்து
தங்கியுள்ளனர்.
கூடாரத்திலேயே தவமிருந்த அவர்கள் யாகம் நடத்தியதுடன், சாம்பலை உடலில் பூசிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர்.
பிப்ரவரி 22-ம் திகதி வரை ஆசி வழங்கும் இவர்கள், தீர்த்தவாரியன்று மகாமகக் குளத்தில் புனித நீராட உள்ளனர்.
No comments
Thank you for your comments