தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் !
புதுவை, பிப்.13:
கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ்
இடம்பெற்றிருந்தது. ஐ.மு. கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதைத்
தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 4.3
சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதிலிருந்து மீண்டு வந்துள்ள காங்கிரஸ்
மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது
தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத்
சென்னை வருகை தந்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. வல்சராஜ் வெள்ளிவிழாவில்
பங்கேற்பதற்காக புதுவை வந்த குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம்
கூறியதாவது: கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் சென்னை வரும் போது
திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். எனக்கும் திமுக
தலைவருக்கும், 40 ஆண்டுக்கால நட்பு உள்ளது. அரசியல் குறித்தும் அவருடன்
பேச்சுவார்த்தை நடத்துவேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய வலுவான கூட்டணியை
ஏற்படுத்துவது அவசியம். இதுதொடர்பாக எங்கள் கட்சியின் மாநில தலைவர்களை
கலந்து ஆலோசித்து அவர்களின் கருத்தை அறிவோம். அதே போல் புதுச்சேரியிலும்
காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக மாநில தலைவர்களுடன் முதலில் கலந்து
பேசுவோம். அவர்களின் கருத்துக்களை அறிந்து தான் கூட்டணி குறித்து
முடிவெடுப்போம்.
இன்று தமிழகத்துக்கும் சென்று தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து
அறிவேன். தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு முன்பு முதலில் அந்தந்த
மாநில நிலவரங்களை அறிவது முக்கியமானது அதற்காக தான் முதல் கட்டமாக இந்த
பயணம் மேற்கொண்டுள்ளேன் என்றார் குலாம் நபி ஆசாத்.
குலாம் நபி ஆசாத்தின் வருகையை வைத்து பார்க்கும் போது ஏறத்தாழ திமுக-
காங்கிரஸ் கூட்டணி உறுதியானதாகவே கூறப்படுகிறது. ஆனாலும் தொகுதிப்
பங்கீடு குறித்து காங்கிரசுடன் தற்போதைக்கு பேச்சு வார்த்தை இருக்காது
எனவும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments
Thank you for your comments