2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ. ராசா தரப்பு இறுதி வாதம் நிறைவு
டெல்லி, பிப்.13:
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் அண்மையில் சிபிஐ தரப்பு
வாதம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு
வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முதலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் மனுசர்மா
தமது வாதங்களை 2 வாரத்துக்கு முன்னர் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில்
தொடங்கி இருந்தார். அவர் இறுதியாக நேற்று முன்வைத்த வாதம்:
சிபிஐ சொன்னது இது
ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய இரு தனியார் நிறுவனங்கள், உரிமங்கள்
மற்றும் அலைவரிசையை தலா ரூ.1,650 கோடிக்கு அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டு
சில மாதங்களிலேயே முறையே ரூ.4,000 கோடி, ரூ.6,000 கோடிக்கு தங்கள்
பங்குகளை விற்று கொள்ளை லாபம் ஈட்டியதாகவும் அதற்கு நிர்வாக ரீதியில் ஆ.
ராசா அளித்த ஒப்புதலே காரணம் என்றும், அதற்குப் பின்னால் கூட்டுச்சதி
இருந்ததாகவும் சிபிஐ குற்றம்சாட்டி வழக்கு தொடுத்தது.
உண்மை இதுவே
ஆனால், இந்த இரு நிறுவனங்கள் பங்குகளை விற்கவில்லை; தொழில்நுட்ப ரீதியான
வணிக விரிவாக்கத்துக்காக தங்கள் பங்குகளை "தளர்த்தி" கொண்டு அன்னிய
முதலீடுகளைப் பெறுவதற்குத்தான் நிதியமைச்சகம் அனுமதி அளித்தது. அதில்
தொலைத்தொடர்புத் துறைக்கோ, எனக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை.
தொலைதொடர்பு துறைக்கு தொடர்பே இல்லை
அந்த நடைமுறைக்கு அனுமதி அளிப்பது பிரதமர் தலைமையிலான பொருளாதார அமைச்சரவை
குழுவாகும். அந்தக் குழுவுக்குப் பரிந்துரை செய்யும் பொறுப்பும் கடமையும்
நிதியமைச்சருக்கும், நிதியமைச்சகத்துக்கும் மட்டுமே உள்ளது. அதில்
தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கோ, எனக்கோ சம்பந்தம் இல்லை.
ஊடக செய்திகள்
ஆனால், இந்த நிறுவனங்களின் பங்கு விற்பனை சட்டத்துக்குப் புறம்பானது
என்றும் இயற்கை வளத்தை குறைந்த விலைக்கு பெற்று கொள்ளை லாபம் பெற்றதாகவும்
ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. எனவே, இதுபற்றி பிரதமர் மன்மோகன்
சிங், என்னையும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்து 2008, நவம்பர்
4-ஆம் தேதி விவாதித்தார்.
சிதம்பரம் விளக்கம்
அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிதியமைச்சர் சிதம்பரம், இந்த இரு
நிறுவனங்களின் பங்குகளை தளர்த்தி கொண்டதன் நடவடிக்கையில் எந்தத் தவறும்
இல்லை என பிரதமரிடம் விளக்கம் அளித்தார்.
இக் கூட்டத்தையடுத்து இதுபற்றி உண்மை நிலையை ஊடகங்களுக்கு
எடுத்துரைக்கும்படியும் எனக்கு அறிவுறுத்தினார். அதன்படி நவம்பர் 7-ஆம்
தேதி, தொலைத்தொடர்பு
பங்கு விற்பனையே அல்ல..
செல்போன் கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்காக
மட்டுமே, ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய இரு நிறுவனங்கள் அன்னிய
முதலீடுகளைப் பெறுவதற்காக தங்களின் பங்குகளை தளர்த்தி கொண்டுள்ளன. இதற்கு
மத்திய நிதியமைச்சகமும் ஒப்புதல் தெரிவித்திருந்தது. எனவே, தனிநபர்
நலனுக்காக யாரும் பங்குகளை விற்கவில்லை.
பரிசீலிக்கவே இல்லை...
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளது. சட்டத்துக்கு
புறம்பாக எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், தனிப்பட்ட முறையில் நான்,
எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. அனைத்தும் அதற்காக அமைக்கப்பட்ட
குழுக்களின் முழு ஒப்புதலுக்குப் பிறகுதான் நான் கையெழுத்திட்டேன்.
இதுதொடர்பாக அனைத்து ஆவணங்களும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது. ஆனால், பொதுக் கணக்கு குழு, நாடாளுமன்ற கூட்டுக்குழு,
மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி), உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட
எந்த அமைப்பும் என் தரப்பு கருத்தையோ, நான் சமர்பித்த ஆவணங்களையோ
பரிசீலிக்க முன் வரவில்லை. எனவே, என் மீது சிபிஐ சுமத்தியுள்ள
குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஆவணங்களின் அடிப்படையிலும், தொலைத்தொடர்பு
துறையின் கொள்கைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் அடிப்படையிலும் தவறானவை
என்பதை சுட்டிக் காட்டியுள்ளேன்.
எனது வாதத்தை முதற்கட்டமாக நிறைவு செய்து கொள்கிறேன். சிபிஐ பதில்
வாதத்ததுக்கு பிறகு என் தரப்பு கூடுதல் வாதத்தை முன் வைக்க அனுமதி அளிக்க
வேண்டுகிறேன்.
இவ்வாறு மனுசர்மா தமது வாதத்தில் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments