Breaking News

சாலையின் நடுவே பள்ளத்தில் சடலமாக கிடந்த வாலிபர்!

சென்னை, பிப்.25:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேபாள வாலிபர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து பலியானது தொடர்பாக பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக திருவான்மியூர் தொடங்கி கல்பாக்கம் வரை நடைபெற்று வருகிறது.


இதற்காக ஆங்காங்கே சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலியை சேர்ந்த பாம்பகதூர் (38) என்ற நேபாள நாட்டை சேர்ந்த நபர், நேற்றிரவு பணிக்கு சென்றுள்ளார்.

ஆனால், பாம்பகதூர் இரவு 9 மணியாகியும் வேலைக்கு வராததால், சக தொழிலாளர்கள் குடும்பத்தினரிடம் தகவல் கேட்டுள்ளனர்.

அப்போது அவர் வேலைக்கு செல்வதாக கிளம்பி சென்றுவிட்டாரே என மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை நடுவே தோண்டப்பட்ட ஒரு பள்ளத்தில், கம்பிகள் குத்தி தொங்கிய நிலையில் பாம்பகதூர் சடலமாக கிடப்பது தெரியவந்ததால் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்றிரவு 11 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்த மாமல்லபுரம் போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

பின்னர் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து மாமல்லபுரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments