Breaking News

மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரித் திருவிழா: 10 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்

கும்பகோணம், பிப்.22:
கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரித் திருவிழா இன்று நடைபெறுகிறது.

கும்பகோணத்தில் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


27 நட்சத்திரங்களில் மிகவும் மேன்மையானது மகம் நட்சத்திரம். 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மகம் நட்சத்திரம் சூரியன், சந்திரன், பூமி, குரு ஆகிய நான்குடன் ஒரே நேர் கோட்டுக்கு வரும். அன்றைய தினம்தான் மகாமகம் புனித நீராடல் நடத்தப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, கோதாவரி, காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய 9 நதிகளும் தங்களது பாவத்தை மகாமகம் தினத்தன்று சிவபெருமான் வழிகாட்டுதலின்படி கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடி போக்கிக் கொண்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

மகாமகம் குளத்துக்குள் மொத்தம் 20 தீர்த்தங்கள் உள்ளன. இந்த 20 தீர்த்தங்களிலும் நீராட வேண்டும் என்பது ஐதீகமாகும்.

பொதுமக்களும் மகாமகம் குளத்தில் நீராடினால் பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கை.

விழா தொடங்கியது முதல் நேற்று முற்பகல் வரை 9 நாட்களில் 30.80 லட்சம் பக்தர்கள் நீராடியுள்ளனர்.

கும்பகோணம் மகாமகப் பெருவிழாவின் 10 நாள் உற்சவத்தின் ஒரு பகுதியாக காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

மகாமகப் பெருவிழாவில் நீராட வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்துள்ளனர்.

மகாமகப் பெருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும் பலர் கும்பகோணம் வந்துள்ளனர்.

10–வது நாளான இன்று முக்கிய தீர்த்தவாரியான ‘‘மகாமகம் நீராடல்’’ நடந்தது.
மகாமகம் குளத்தில் இன்று நீராடி புனிதம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்தனர்.

இந்த தடவை முதல் முறையாக இமயமலை மற்றும் காசியில் இருந்து வந்துள்ள நாக சாதுக்களும் மகா மகம் குளத்தில் புனித நீராடினார்கள்.

ஒரே சமயத்தில் 10 லட்சம் பேரும் குளத்தில் நீராட முடியாது என்பதால் பொலிசார் தலா 30 ஆயிரம் பேர் விதமாக குளத்தில் நின்று புனித நீராட அனுமதித்துள்ளனர்.

கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காக மக்கள் 6 பிரிவுகளாகப் பிரித்து வரிசையாக குளத்துக்குள் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சுமார் 30 ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மகாமகம் குளத்தில் நீராடிய பிறகு பக்தர்கள் பொற்றாமரை குளத்துக்கும், காவிரி கரையில் உள்ள சக்கர படித்துறைக்கும் நீராட அணி வகுத்து சென்ல்கின்றனர்.

பின்னர் கோவில்களில் நீண்டநேரம் வரிசையில் நின்று வழிபடுகின்றனர்.

No comments

Thank you for your comments